மந்திரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் கன்னட அமைப்பினர் போராட்டம்


மந்திரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் கன்னட அமைப்பினர் போராட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2022 6:45 PM GMT (Updated: 6 Dec 2022 6:47 PM GMT)

மராட்டிய மந்திரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மராட்டிய லாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு:

மீண்டும் பிரச்சினை

கர்நாடக எல்லைக்குள் உள்ள பெலகாவியை மராட்டிய மாநிலம் நீண்ட காலமாக சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த எல்லை பிரச்சினை இரு மாநிலங்கள் இடையே கடந்த 60 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தற்போது கர்நாடகம்-மராட்டியம் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது.

இதனால் ஆவேசம் அடைந்த மராட்டிய அமைப்பினர் தங்கள் மாநிலத்திற்கு வந்த கர்நாடக அரசு பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் பஸ்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். இதற்கு கர்நாடக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. மராட்டியத்தில் வசிக்கும் கன்னடர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வலியுறுத்தினார். இந்த பிரச்சினையால் கர்நாடக-மராட்டிய எல்லையில் பதற்றம் நிலவியது. அந்த பதற்றம் சற்று அமைதியானது.

ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்

இந்த நிலையில் மராட்டிய மந்திரிகள் 2 பேர் நேற்று பெலகாவிக்கு வந்து மராட்டிய அமைப்பினரை சந்தித்து பேச இருப்பதாக அறிவித்து இருந்தனர். இதற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தனது ஆட்சேபனையை கடிதம் மூலம் மராட்டிய அரசுக்கு கர்நாடகம் தெரிவித்தது. இந்த நிலையில் மராட்டிய மாநில மந்திரிகள் பெலகாவிக்கு வருகை தருவதற்கு தடை விதித்து பெலகாவி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் மராட்டிய மந்திரிகள் பெலகாவி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக ரக்‌ஷண வேதிகே (நாராயணகவுடா) அமைப்பு பெலகாவியில் நேற்று போராட்டம் நடத்தியது. பெலகாவி நோக்கி வந்த அவர்களை போலீசார் ஹிரேபாகவாடி சுங்கச்சாவடி அருகே தடுத்து நிறுத்தினர். அவர்கள் அந்த வழியாக வந்த மராட்டிய லாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அந்த லாரிகளின் கண்ணாடி உடைந்தன.

மேலும் போராட்டக்கார்கள் மராட்டிய மாநில சரக்கு லாரிகளை தடுத்து நிறுத்தி அவற்றின் மீது ஏறி தங்களின் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர். சிலர் அந்த லாரியில் மராத்தி மொழியில் எழுதப்பட்டிருந்த எழுத்துகளை கருப்பு மை பூசி அழித்தனர். மேலும் சிலர் அந்த லாரிகளின் சக்கரத்தில் இருந்து காற்றை பிடுங்கிவிட்டனர். மேலும் அவர்கள், மராட்டிய மாநிலத்திற்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது கன்னட அமைப்பினர் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு உண்டானது. மேலும் தடுப்பு வேலிகளை தாண்டி சுங்கச்சாவடியை கடக்க முயன்றனர். இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து பஸ்களில் அழைத்து சென்றனர்.

போலீசார் தடுக்கிறார்கள்

அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த நாராயணகவுடா, "பெலகாவி கர்நாடகத்திற்கு சொந்தமானது. ஆனால் மராட்டிய அமைப்பினர் அடிக்கடி எல்லை பிரச்சினையை கிளப்பி வருகிறார்கள். இதை கண்டித்து போராட்டம் நடத்த நாங்கள் பெலகாவிக்கு வந்துள்ளோம். ஆனால் பெலகாவிக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுக்கிறார்கள். இதை கண்டிக்கிறேன். கர்நாடகத்தில் நாளை (அதாவது இன்று) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் எங்கள் அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படும், இந்த விஷயத்தில் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்" என்றார்.

இதுபோல் மராட்டிய மாநிலம் புனேவில் சிவசேனா கட்சியினர் கர்நாடக வாகனங்களை வழிமறித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவங்களால் மராட்டியம்-கர்நாடக எல்லையோர மாவட்டமான பெலகாவியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பெலகாவி மற்றும் அதன் எல்லை பகுதியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சோதனை சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மராட்டிய மந்திரிகள் வருகை ரத்து

மராட்டிய மந்திரிகளான சந்திரகாந்த் பட்டீல், சம்புராஜ் தேசாய் ஆகிய 2 பேர் நேற்று பெலகாவுக்கு வந்து எல்லை விவகாரம் தொடர்பாக மராட்டிய அமைப்பினரை நேரில் சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தனர். இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதுதொடர்பாக மராட்டிய மாநில அரசுக்கு கர்நாடக அரசு ஒரு கடிதம் அனுப்பி, பதற்றமான சூழலில் மந்திரிகள் பெலகாவிக்கு வருவது சரியல்ல என்று கூறி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. மேலும் கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில் மராட்டிய மந்திரிகள் நேற்று திட்டமிட்டு இருந்த பெலகாவி பயணத்தை ரத்து செய்தனர். மற்றொரு நாள் பெலகாவிக்கு செல்வோம் என்று அந்த மந்திரிகள் அறிவித்துள்ளனர். அந்த மந்திரிகள், தங்களின் பெலகாவி பயண திட்டத்திற்கு கர்நாடகம் அரசியல் சாயம் பூசிவிட்டதாகவும், அதனால் தற்போதைய நிலையில் பெலகாவிக்கு சென்றால் சரியாக இருக்காது என்று கருதி பயணத்தை ரத்து செய்துவிட்டதாகவும் அந்த மந்திரிகள் கூறியுள்ளனர்.


Next Story