மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம்: பணி பாதுகாப்பை உறுதி செய்யும் வழிமுறைகளை ஆராய்வது அவசியம் - சுப்ரீம் கோர்ட்டு


மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம்: பணி பாதுகாப்பை உறுதி செய்யும் வழிமுறைகளை ஆராய்வது அவசியம் - சுப்ரீம் கோர்ட்டு
x

பணி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான வழிமுறைகளை தமிழக அரசு ஆராய்வது அவசியம் என மக்கள் நலப்பணியாளர்கள் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

புதுடெல்லி,

மக்கள் நலப்பணியாளர்கள் 13,500 பேருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு முன் நடைபெற்று வருகிறது.

இதில் விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப்பணியாளர்கள் மறுவாழ்வு சங்கத்தின் மாநில தலைவர் தனராஜ் சார்பில் ஆஜரான வக்கீல் ஹரிபிரியா பத்மநாபன், 'மக்கள் நலப்பணியாளர்களுக்கு தமிழக அரசு முன்மொழிந்துள்ள ஊதிய அட்டவணை ஏற்கனவே மக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு ஊதிய அட்டவணையை விட குறைவு. தமிழக அரசின் முன்மொழிவு மக்கள் நலப்பணியாளர்களின் நலன்களை கடுமையாக பாதிக்கும்' என வாதிட்டார்.

மக்கள் நலப்பணியாளர்களில் ஒரு பிரிவினர் சார்பில் வக்கீல் நந்தகுமார் ஆஜராகி, 'தமிழக அரசு அறிவித்த ரூ.7,500 ஊதியம் போதாது. ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.

மக்கள் நலப்பணியாளர்களில் ஒரு பிரிவினர் சார்பில் வக்கீல் வில்சன் ஆஜராகி, '12 ஆயிரம் மக்கள் நலப்பணியாளர்களில் 10 ஆயிரம் பேர் தமிழக அரசின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர். பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டுள்ளதால் தமிழக அரசின் அறிவிப்பை அங்கீகரிக்க வேண்டும்' என வாதிட்டார்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ரஞ்சித் குமார், 'மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.7,500 மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களாக பணியமர்த்தும் தமிழக அரசின் முன்மொழிவை பெரும்பாலானவர்கள் வரவேற்றுள்ளனர். 10,375 பேர் தமிழக அரசின் முன்மொழிவை ஏற்று பணியில் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்' என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், 'மக்கள் நலப்பணியாளர்களுக்கு தற்பொழுதும், எதிர்காலத்திலும் பணி பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான வழிமுறை களை அரசு ஆராய்வது அவசியம்' என தெரிவித்து, வழக்கு விசாரணையை 3-ந்தேதிக்கு (இன்று) தள்ளிவைத்தனர்.


Next Story