போலீஸ் பாதுகாப்புடன் சாலை அமைத்த பொதுப்பணித்துறை ஊழியர்கள்
சோமவார்பேட்டை அருகே மசகோடு கிராமத்தில் போலீஸ் பாதுகாப்புடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குடகு:-
குண்டும், குழியுமான சாலை
குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா நேருகல்லே கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதியில் மசகோடு என்ற கிராமம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த கிராமத்தில் இருந்து கனிவே கிராமத்திற்கு ெசல்லும் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதனால் அந்த சாலையில் ஏராளமான விபத்துகள் ஏற்பட்டது.
இந்த நிலையில் அந்த சாலைகளை சீரமைத்து கொடுக்கவேண்டும் என்று பல மாதங்களாக பொதுமக்கள் கிராம பஞ்சாயத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து மசகோடு-கனிவே மேம்பாட்டு போராட்ட குழு என்ற தலைப்பில் கிராம மக்கள் சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
மேலும் சமீபத்தில் மாட்டு வண்டிகளில் வந்து போராட்டம் நடத்தி கிராம பஞ்சாயத்து அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊழியர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
போலீஸ் பாதுகாப்பு...
இதை அறிந்த கிராம மக்கள் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது மசகோடு பகுதியில் மட்டும் சாலை அமைக்காமல் கனிவே கிராமம் வரை சாலை அமைத்து கொடுக்கவேண்டும் என்று போராடினர். இதைப்பார்த்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனே மாவட்ட சூப்பிரண்டிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, பாதுகாப்பிற்கு போலீசாரை அனுப்பி வைத்தார். இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் மசகோடு பகுதியில் சாலை அமைக்கும் பணியில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர்.
மேலும் விரைவில் கனிவே கிராமம் வரை சாலை அமைக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி உறுதி அளித்துள்ளனர்.