புதுவை கல்லூரி மாணவி கொலை: சினிமா பாணியில் குற்றவாளியை துரத்தி பிடித்த போலீசார் - பரபரப்பு வாக்குமூலம்


புதுவை கல்லூரி மாணவி கொலை: சினிமா பாணியில் குற்றவாளியை துரத்தி பிடித்த போலீசார் - பரபரப்பு வாக்குமூலம்
x

புதுச்சேரியில் கல்லூரி மாணவியை கொலை செய்த வாலிபரை போலீசார் பிடித்த போது தவறி விழுந்ததில் கை முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புதுவை:

திருபுவனை அருகே கல்லூரி மாணவியை வெட்டி கொன்ற ரவுடி சன்னியாசி குப்பத்தில் பதுங்கியிருந்த நிலையில் போலீசார் சினிமா பாணியில் துரத்திச் சென்று பிடித்தனர். அப்போது சுவர் ஏறி குதித்து தப்பி ஓட முயன்ற போது ரவுடியின் வலது கை முறிந்தது. அதைத் தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மாணவி கொலை

புதுச்சேரி திருபுவனை அடுத்த சன்னியாசிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 49). இவரது மகள் கலிதீர்த்தாள்குப்பம் அரசு கலைக்கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நாகராஜின் முதல் மனைவியின் அண்ணன் மகன் முகேஷ் (22) மாணவியை காதலித்து வந்துள்ளார். ஆனால் முகேஷ் குடித்துவிட்டு, ஊர்சுற்றி வந்ததால் மாணவி அவரிடம் பேசாமல் இருந்து வந்துள்ளதாக தெரிய வருகின்றது.

இதனால் ஆத்திரமடைந்த முகேஷ் கடந்த 19-ம் தேதி மாலை கல்லூரி முடிந்து மாணவி பஸ்சில் சன்னியாசிக்குப்பம் வந்தபோது, அவரை கத்தியால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். திருபுவனை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.

போலீஸ் விசாரணை

இதற்கிடையில் தலைமறைவான முகேஷை வலைவீசி தேடி வந்தனர். முகேஷ் மீது ஏற்கனவே வெடிகுண்டு, அடி தடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், செல்போனை வீட்டிலேயே வைத்துவிட்டு ஊரிலிருந்து தலைமறைவானதால் அவர் தமிழகத்தில் பதுங்கி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.

புதுச்சேரி சீனியர் எஸ்.பி தீபிகா உத்தரவின்பேரில் மேற்கு எஸ்.பி ஜிந்தா கோதண்ட ராமன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு ஒருவாரமாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி முகேஷின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் தொலைபேசி தேடினார்கள்.

நேற்று கொலை குற்றவாளி முகேஷின் புகைப்படத்தை வெளியிட்ட திருபுவனை போலீசார், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து தேடுதல் வேட்டையை மேலும் தீவிரப்படுத்தினார்கள். இந்நிலையில் சன்னியாசிகுப்பத்தில் ஒரு கம்பெனி அருகில் பதுங்கியிருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

கை முறிவு

அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்ய சென்றனர். அப்போது போலீசை கண்டதும் அவர்களிடம் பிடிபடாமல் இருக்க அங்குள்ள ஒரு கம்பெனியின் சுவரை ஏறிகுதித்து தப்பிஓட முகேஷ் முயன்றதாக தெரிகிறது.

அப்போது தடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. இதையடுத்து வலியால் அலறித்துடித்த அவரை சுற்றிவளைத்த போலீசார். உடனே முகேசை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் உடனடியாக அவருக்கு எலும்பு முறிவு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

அதை தொடர்ந்து முகேசை காவல் நிலையம் அழைத்து வந்த திருபுவனை போலீசார் கல்லூரி மாணவி கொலை வழக்கில் அவரை கைது செய்தனர். பின்னர் கொலைக்கான காரணம் குறித்து அதிரடியாக விசாரித்தனர். அப்போது அவர் போலீசில் அளித்த வாக்குமூலம் கூறப்படுவதாவது.

வாக்குமூலம்

தனது உறவினர் மகளான மாணவியை சில வருடங்களாக முகேஷ் காதலித்து வந்துள்ளார். அவரும் முகேசை விரும்பியுள்ளார். ஆனால் சமீபகாலமாக முகேஷ் ரவுடிகளுடன் தொடர்பில் இருந்து மது மற்றும் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியிருப்பது தெரியவர கல்லூரி மாணவி காதலை முறித்துள்ளார். அவருடன் சில நாட்களாக பேசுவதை தவிர்த்துள்ளார்.

சம்பவத்தன்று மாணவியை வழிமறித்தபோது அவருடன் பேச விருப்பமில்லை என கூறவே, முகேசுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தான் வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரி உடலில் பல்வேறு இடங்களில் கொடூரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இந்நிலையில் அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை..?

செல்போனை வீட்டில் வீசிவிட்டு சென்றதால் அவரது இருப்பிடம் தெரியாமல் தனிப்படையினர் திணறினர். தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சன்னியாசிகுப்பம் சென்ற 3 போலீசார் அங்கு பதுங்கியிருந்த முகேசை சினிமா பட பாணியில் ஓடஓட துரத்திச் சென்று பிடித்துள்ளனர்‌. அப்போது தடு மாறி விழுந்ததில் அவரது வலது கை முறிந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.

இதையடுத்து அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்த போலீசார், இன்று மாலை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி அவரை காளப்பட்டி சிறையில் அடைத்தனர். புதுச்சேரி மாநில அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த சம்பவம் கல்லூரி மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லை என்பதை காட்டியுள்ளது.


Next Story