'காதல்'பட பாணியில் காதலனை நைசாக அழைத்து சென்று பஸ் முன் தள்ளிவிட்டு கொலை;காதலியின் குடும்பம் கொடூரம்
'காதல்' பட பாணியில் காதலனை நைசாக அழைத்து சென்று பஸ் முன் தள்ளிவிட்ட கொலை செய்த காதலியின் குடும்பத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பாட்னா
பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் கத்தாரா கிராமத்தைச் சேர்ந்தவர் ரவுஷன் குமார் (25). பட்டதாரியான இவர், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, இவர்களின் காதல் விவகாரம் அந்தப் பெண்ணின் பெற்றோருக்கு அண்மையில் தெரியவந்து பெரும் பிரச்சினை ஆனதாக கூறப்படுகிறது.
ரவுஷன் குமாரும், அந்த இளம்பெண்ணும் ஒரே சமூகம் என்ற போதிலும், அவர் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர்களின் காதலுக்கு பெண்ணின் பெற்றோர் சம்மதிக்கவில்லை.
ஆனால், அந்த இளம்பெண் திருமணம் செய்தால் ரோஷன் குமாரைத்தான் திருமணம் செய்வேன் என உறுதியாக இருந்துள்ளார். இதனால் அந்தப் பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் கடந்த மாதம் ரவுஷன் குமாரின் வீட்டுக்கு சில குண்டர்களுடன் சென்றுள்ளனர்.
அப்போது தனது மகளை மறந்துவிடும்படியும், அவரிடம் இனி பேசக்கூடாது எனவும் ரோஷன் குமாரை அவர்கள் மிரட்டியுள்ளனர். ஆனால் அவர்களின் மிரட்டலுக்கு ரவுஷன் குமார் பணியவில்லை எனத் தெரிகிறது.
இதன் காரணமாக, இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ரவுஷன் குமாரையும், அவரது குடும்பத்தினரையும் அவர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இந்நிலையில், இங்கிருந்தால் தங்களை சேர்ந்து வாழ விட மாட்டார்கள் எனத் தெரிந்துகொண்ட ரவுஷன் குமாரும், இளம்பெண்ணும் யாருக்கும் தெரியாமல் கடந்த மாதம் முசாபர்பூர் மாவட்டத்துக்கு சென்றனர்.
அங்கு அவர்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி, அங்கேயே திருமணமும் செய்து கொண்டனர். ரவுஷன் குமாருக்கு உடனடியாக வேலை கிடைக்காததால் அவர் வேலை தேடி வந்துள்ளார். இதனிடையே, அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவர்கள் இருவரையும் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த சூழலில், ரவுஷன் குமாரை முசாபர்பூர் மாவட்டம் ஹாஜ்பூரில் பார்த்ததாக இளம்பெண்ணின் குடும்பத்தினரும் கடந்த வாரம் சிலர் கூறியுள்ளனர். இதன்பேரில், ஹாஜ்பூருக்கு கடந்த வெள்ளிக்கிழமை வந்த பெண்ணின் குடும்பத்தார், ரோஷன் குமாரின் புகைப்படத்தை காட்டி அங்குள்ளவர்களிடம் விசாரித்துள்ளனர்.
இதில் அவர்கள் தங்கியிருந்த வீட்டை அக்கம்பக்கத்தினர் காண்பித்தனர். இதையடுத்து, திடீரென வீட்டுக்கு வந்த அவர்களை பார்த்து ரவுஷன் குமாரும், இளம்பெண்ணும் பதட்டம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து, பெண் வீட்டார் அவர்களை சமாதானப்படுத்தினர். "நம் ஊருக்கு செல்லலாம். அங்கு உங்களுக்கு திருமணமும் நடத்தி வைக்கிறோம்" என அவர்கள் கூறினர்.
இதனை நம்பிய அந்த ஜோடிகளும், பெண் வீட்டாருடன் அன்று மதியம் காரில் சென்றனர். கார் ஹாஜ்பூர் பகுதியை தாண்டி, பகுலி சவுக் பகுதியை அடைந்ததும் திருமணத்துக்கு தேவையான சில பொருட்களை வாங்கி வருமாறு ரோஷன் குமாரை பெண் வீட்டார் கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து அவரும் காரில் இருந்து இறங்கியுள்ளார். அவருடன் பெண்ணின் தந்தை, சகோதரர்கள், மாமா ஆகியோரும் சென்றனர். அப்போது சாலையை கடக்கும் போது, ரவுஷன் குமாரின் கை, கால்களை பிடித்து தூக்கிய அவர்கள், அங்கு வந்துக் கொண்டிருந்த பஸ்சின் முன்பு தூக்கியெறிந்து உள்ளனர். இதில் பஸ் அவர் மீது ஏறியதில், ரோஷன் குமார் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தன் கண் முன்பே கணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதை பார்த்த அந்த இளம்பெண் கதறி அழுதார். இந்த சம்பவத்தை கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர் போலீசாரு்ககு தகவல் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் அங்கு வந்து ரவுஷன் குமாரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய பெண் வீட்டார் 3 பேரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள மற்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.