ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ.வை அறைந்த கணவர்; சமூக வலைத்தளத்தில் வீடியோ வைரல்
ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ பல்ஜிந்தர் கவுரை அவருடைய கணவர் கன்னத்தில் அறையும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி ‘வைரல்’ ஆனது.
சண்டிகார்,
பஞ்சாப் மாநிலத்தில் ஆளுங்கட்சி ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. பல்ஜிந்தர் கவுர். தல்வன்டி சபோ தொகுதியில் 2-வது தடவையாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.
அவருடைய கணவர் சுக்ராஜ்சிங், ஆம் ஆத்மியில் மஜா பிராந்தியத்தின் இளைஞர் பிரிவு அமைப்பாளராக உள்ளார். இந்தநிலையில், பல்ஜிந்தர் கவுரை அவருடைய கணவர் கன்னத்தில் அறையும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி 'வைரல்' ஆனது.
அதில், கணவருடன் பல்ஜிந்தர் கவுர் வாக்குவாதம் செய்கிறார். ஒரு கட்டத்தில், கணவர் எழுந்து, பல்ஜிந்தர் கவுரின் கன்னத்தில் அறைகிறார். பக்கத்தில் நின்றவர்கள், சுக்ராஜ்சிங்கை பிடித்து தள்ளி விடுகிறார்கள். கடந்த ஜூலை 10-ந்தேதி இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து எம்.எல்.ஏ. தரப்பில் புகார் அளிக்கப்படவில்லை. பஞ்சாப் மாநில பெண்கள் ஆணைய தலைவர் மனிஷா குலாதி, தாங்களாக முன்வந்து நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.