ராகுல் காந்திக்கு கண்டன நோட்டீஸ்; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
கே.ஜி.எப். பட பாடலை பயன்படுத்திய வழக்கில் ராகுல் காந்திக்கு கண்டன நோட்டீஸ் அனுப்பும்படி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
கே.ஜி.எப். பட பாடலை பயன்படுத்திய வழக்கில் ராகுல் காந்திக்கு கண்டன நோட்டீஸ் அனுப்பும்படி கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ராகுல் காந்தி
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். அந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் வழியாக மத்திய பிரதேசத்தை அடைந்துள்ளது. அங்கு தற்போது இந்த யாத்திரை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரை இணைய பக்கத்தில் கே.ஜி.எப்.-2 பட பாடல் பதிவேற்றம் செய்யப்பட்டு அந்த யாத்திரையின் பேரணிக்கு பயன்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக அந்த எம்.ஆர்.டி. இசை நிறுவனம் புகார் அளித்தது. அதன் அடிப்படையில் ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா சிரிநடே உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேல்முறையீடு செய்தது
மேலும் இதுதொடர்பாக பெங்களூரு கீழமை கோர்ட்டு, காங்கிரஸ் மற்றும் ஒற்றுமை யாத்திரை டுவிட்டர் கணக்கை முடக்கும்படி உத்தரவிட்டது. இந்த கீழமை கோர்ட்டின் உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் காங்கிரஸ் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி கீழமை கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது. கே.ஜி.எப். பட பாடலை தங்களின் டுவிட்டர் கணக்கில் இருந்து நீக்குவதாக காங்கிரஸ் உறுதி அளித்தது.
இந்த நிலையில் கே.ஜி.எப். பட இசை நிறுவனம் கர்நாடக ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தது. அதில், காங்கிரஸ் கட்சி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை பின்பற்றவில்லை என்றும், கோர்ட்டு விதித்த கட்டுப்பாடுகளை மீறிவிட்டதாகவும் கூறி இருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி பி.பி.வரலே, நீதிபதி அசோக் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் மனு மீது விசாரணை நடத்தி, ராகுல் காந்தி மற்றும் வழக்கில் தொடர்பு உடையவர்களுக்கு கண்டன நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளனர்.