சதாம் உசேன் போல் காணப்படுகிறார் ராகுல் காந்தி; அசாம் முதல்-மந்திரி பேச்சுக்கு காங்கிரஸ் கண்டனம்
ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் போல் ராகுல் காந்தி காணப்படுகிறார் என்ற அசாம் முதல்-மந்திரியின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் மாதம் 7-ந்தேதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கினார்.
காஷ்மீர் வரை செல்லும் இந்த பயணம் பின்பு கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம் என தென் மாநிலங்களில் நீடித்து, பின்னர் மராட்டியத்திற்கு சென்றது. அதன்பின்னர் இன்று 77-வது நாளில் மத்திய பிரதேசத்திற்கு ராகுல் காந்தி வருகை தந்துள்ளார்.
இந்த நிலையில், அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறும்போது, ராகுல் காந்தியின் முகம் மாறியுள்ளது. உங்களது தோற்றத்தினை மாற்ற வேண்டும் என நீங்கள் விரும்பினால், வல்லபாய் பட்டேல் அல்லது ஜவகர்லால் நேரு போல் மாற்றுங்கள்.
காந்திஜி போன்று கூட நீங்கள் நன்றாக தோற்றமளிப்பீர்கள். ஆனால், சதாம் உசேனை போன்று தற்போது காணப்படுகிறீர்கள் என்று கூறினார்.
இதுவே, காங்கிரஸ் தலைவர்களின் பழக்க வழக்கங்கள், இந்திய கலாசாரத்துடன் நெருங்கிய வகையில் இல்லாமல் இருப்பதற்கு காரணம். அவர்கள் எப்போதும் மற்றவர்களின் கலாசாரங்களை தத்தெடுத்து கொள்ள முயற்சிக்கின்றனர் என பேசியுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி காங்கிரசின் சந்தீப் தீட்சித் கூறும்போது, பாதயாத்திரையால் அவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். இந்த அளவுக்கு அவர்கள் தாழ்ந்து போவார்கள் என நினைக்கவில்லை.
உங்களது தலைவர் (பிரதமர் மோடி) தாடி வளர்க்கும்போது, நாங்கள் எதுவும் கூறவில்லை. நாங்கள் உண்மையான விவகாரங்களை பற்றி பேசுகிறோம் என தெரிவித்து உள்ளார்.