ராகுல் காந்தி காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளலாம்: ராம்தாஸ் அதவாலே


ராகுல் காந்தி காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளலாம்:  ராம்தாஸ் அதவாலே
x

இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பதிலாக ராகுல் காந்தி காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ளலாம் என ராம்தாஸ் அதவாலே இன்று கூறியுள்ளார்.

புதுடெல்லி,



கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரத்துக்கு ராகுல் காந்தி பாதயாத்திரை செல்கிறார். தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

இந்திய ஒற்றுமை பாதயாத்திரை என்ற பெயரில் மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பாதயாத்திரை மூலம் ராகுல்காந்தி 3,570 கி.மீ. தூரத்திற்கு நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பாதயாத்திரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், அகில இந்திய நிர்வாகிகள், அந்தந்த மாநில நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் ராகுல் காந்தியுடன் செல்கிறார்கள்.

இதுபற்றி மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான இணை மந்திரி ராம்தாஸ் அதவாலே இன்று கூறும்போது, ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரைக்கு பதிலாக, காங்கிரஸ் ஒற்றுமை யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேன்.

நாட்டை இணைக்கும் பணியை பிரதமர் மோடி மேற்கொண்டிருக்கிறார். நாட்டை ஒன்றிணைப்பதற்காக அல்ல, உடைப்பதற்காக ராகுல் காந்தி பயணிக்கிறார் என நான் நினைக்கிறேன் என்று ராம்தாஸ் அதவாலே இன்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தி எவ்வளவு முயற்சித்தபோதும் அது பலனளிக்க போவதில்லை. 2024-ம் ஆண்டு பொது தேர்தலில் காங்கிரஸ் அதிகாரத்திற்கு வரபோவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

காங்கிரசின் மூத்த தலைவா்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக கடந்த ஆகஸ்டு இறுதியில் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடா்பாக கட்சி தலைவா் சோனியா காந்திக்கு அவா் எழுதிய கடிதத்தில், கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீா்குலைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.

காஷ்மீரில் குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக இளைஞர் காங்கிரசார் உள்பட 36 தலைவர்கள் பதவி விலகி கட்சிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளனர். அதற்கு சில நாட்களுக்கு முன் ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரி தாரா சந்த் உள்பட 64 தலைவர்கள் பதவி விலகி இருந்தனர்.


Next Story