ராகுல்காந்தி பாதயாத்திரை டுவிட்டரை முடக்க தடை
கே.ஜி.எப். பட பாடல் இசையை பயன்படுத்திய வழக்கில் ராகுல்காந்தி பாதயாத்திைர டுவிட்டர் கணக்கை முடக்கும்படி கீழ் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:-
டுவிட்டர் கணக்குகள் முடக்கம்
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். அங்கிருந்து கேரளா, கர்நாடகம், ஆந்திரா வழியாக தெலுங்கானாவுக்கு அந்த யாத்திரை வந்தது. ராகுல்காந்தியின் அந்த யாத்திரை தற்போது தெலுங்கானாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் ராகுல்காந்தியின் ஒற்றுமை பாதயாத்திரை டுவிட்டர் கணக்குகளில் பாதயாத்திரை வீடியோவுக்கு கே.ஜி.எப்.-2 பட பாடல் இசை பயன்படுத்தப்பட்டது.
இது குறித்து அந்த பாடல் உரிமை பெற்ற எம்.ஆர்.டி. நிறுவனம் யஷ்வந்தபுரம் போலீசில் புகார் தெரிவித்தது. அதன் பேரில் ராகுல்காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே பெங்களூரு வணிக கோர்ட்டில் அந்த எம்.ஆர்.டி. நிறுவனம் காங்கிரசுக்கு எதிராக வழக்கு தொடுத்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, காங்கிரஸ் மற்றும் ராகுல்காந்தியின் பாதயாத்திரையின் டுவிட்டர் கணக்குகளை முடக்கும்படி உத்தரவிட்டது. இதையடுத்து அந்த டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன.
உத்தரவுக்கு தடை
பெங்களூரு கோர்ட்டு உத்தரவை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் காங்கிரஸ் மேல்முறையீடு செய்தது. இதை அவசர வழக்காக கருதி விசாரிக்குமாறு காங்கிரஸ் தரப்பு வக்கீல்கள் கோரினர். அதை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் அந்த மனு மீது ஐகோர்ட்டில் நேற்று மாலை விசாரணை நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி ஆஜரானார்.
அவர் வாதிடுகையில், காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதை நீக்குமாறும், கே.ஜி.எப். பட பாடல் இசையை தங்களின் டுவிட்டரில் இருந்து நீக்குவதாகவும் கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், காங்கிரஸ் மற்றும் ராகுல்காந்தியின் பாதயாத்திரை டுவிட்டர் கணக்குகளை முடக்கும்படி பிறப்பிக்கப்பட்ட கீழ்கோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.