2024 மக்களவை தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தி போட்டி - காங்கிரஸ் நிர்வாகி தகவல்


2024 மக்களவை தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தி போட்டி - காங்கிரஸ் நிர்வாகி தகவல்
x

2024 மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் நிர்வாகி அஜய் ராய் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

2024 மக்களவை தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று பிரயாக்ராஜ் காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். அமேதி மக்களவை தொகுதியில் தொடர்ந்து 3 முறை ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானியிடம் தோல்வியடைந்தார். தற்போது அவர் வயநாடு தொகுதியின் எம்பியாக உள்ளார்.

இந்த நிலையில், 2024 மக்களவை தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று பிரயாக்ராஜ் பிராந்திய காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், நேரு குடும்பத்துக்கும் அமேதிக்கும் பழைய உறவு இருக்கிறது. அதை யாராலும் பலவீனப்படுத்த முடியாது. ராகுல் காந்தி வருகிற 2024 மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிடுவார். அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை அதிக வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் வெற்றி பெற செய்து எம்.பி.யாக டெல்லிக்கு அனுப்ப வேண்டும்.

பாரத் ஜோடா யாத்திரை தற்போது ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 3 அல்லது 4 ஆம் தேதியில் உத்தரப் பிரதேசத்தில் நுழையும்.

வியாபாரிகள் தங்கள் கடைகளை விட்டு ஓடுகிறார்கள். ஜி.எஸ்.டி வரி குறித்து வியாபாரிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இருந்த வியாபாரிகள் தற்போது துன்புறுத்தப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story