ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு; காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் பேட்டி
ராகுல் காந்தியின் பாதயாத்திரைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளதாக காங்கிரஸ் பிரசார குழு தலைவர் எம்.பி.பட்டீல் தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு;
எம்.பி.பட்டீல் வருகை
கர்நாடக காங்கிரஸ் பிரசார குழு தலைவரும், முன்னாள் மந்திரியுமான எம்.பி.பட்டீல் நேற்று முன்தினம் சிக்கமகளூருவுக்கு வந்தார். சிருங்கேரியில் உள்ள சாரதம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அவர், சிருங்கேரி மடாதிபதி பாரதிய தீர்த்த சங்கராச்சாரியாரிடம் ஆசி பெற்றார். பின்னர் பாலேஒன்னூரில் உள்ள ரம்பாபுரி மடத்துக்கும் சென்று மடாதிபதியிடம் ஆசி பெற்றார்.
இதையடுத்து எம்.பி.பட்டீல், பாபாபுடன் கிரி மலைக்கு சென்று தத்தா பாதத்தை தரிசனம் செய்தார். பின்னர் சிக்கமகளூருவுக்கு வந்து அங்குள்ள தனியார் ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். இந்த நிலையில் நேற்று காலை எம்.பி.பட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் கொதிப்பு
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டி காங்கிரசை தேர்தெடுப்பார்கள். கடந்த 3 ஆண்டுகளில் பா.ஜனதா மாநிலத்தில் எந்த நலத்திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் 5 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 15 ஆயிரம் வீடுகளை கட்டி கொடுத்தோம். ஆனால் பா.ஜனதாவினர் கடந்த 3 ஆண்டுகளில் ஒரு வீடு கூட கட்டி கொடுக்கவில்லை.
மத்திய அரசு, அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளது. இதனால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர். தாவணகெரேயில் நடந்த சித்தராமையாவின் பிறந்தநாள் விழாவில் 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் மங்களூருவில் நடந்த பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் 50 ஆயிரம் பேர் கூட கலந்துகொள்ளவில்லை.
மக்கள் மத்தியில் வரவேற்பு
ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதயாத்திரை தொடங்கி உள்ளார். ராகுல்காந்தியின் இந்த பாதயாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலிலும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி.
நான் செல்லும் இடம் எல்லாம் காங்கிரசுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.