

பெங்களூரு:
பெங்களூருவில் மழை பாதித்த பகுதிகளை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பார்வையிட்டார். நிவாரண பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
பசவராஜ் பொம்மை பார்வையிட்டார்
பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த நிலையில், பெங்களூருவில் மழை பாதித்த பகுதிகளை நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பார்வையிட்டார்.
பெங்களூரு ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள அரசு இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்ட முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மாரத்தஹள்ளி மெயின் ரோடு அருகே போர்வெல் ரோட்டில் இருக்கும் டி.என்.ஏ. அடுக்குமாடி குடியிருப்பை பார்வையிட்டார். கனமழை காரணமாக அந்த குடியிருப்பில் தண்ணீர் புகுந்திருந்ததால், அங்கு வசிப்பவர்களிடம் மழை பாதிப்பு குறித்து அவர் கேட்டு அறிந்து கொண்டார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
பின்னர் ஒயிட்பீல்டு மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகே மழை பாதித்த பகுதிகளையும், பி.ஆர். லே-அவுட், சாந்தி நிகேதன் லே-அவுட், ஓ.ஏ.ஆர். லே-அவுட், கரியண்ணா அக்ரஹாரா, மாரத்தஹள்ளியில் பல்வேறு பகுதிகளையும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பார்வையிட்டார். அங்கிருந்த பொதுமக்களிடம் மழை பாதிப்பு குறித்து கேட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.
அதே நேரத்தில் மாரத்தஹள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைநீர் புகுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும்படியும் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, மகாதேவபுராவில் உள்ள திருமண மண்டபத்தில் மழை பாதிப்பு குறித்தும், நிவாரண பணிகளை வழங்குவது குறித்தும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார்.