ராமர் பாலம் வழக்கு: மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் - சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்


ராமர் பாலம் வழக்கு: மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் - சுப்பிரமணியசாமி வலியுறுத்தல்
x

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் சுப்பிரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.

புதுடெல்லி,

ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கக் கோரும் பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி உள்ளிட்டோரின் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்புடைய மனுக்கள் அதிக அளவிலான பக்கங்களை கொண்டுள்ளன. எனவே இதில் எம்மாதிரியான உத்தரவை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை சுருக்கமாக தெரிவிக்குமாறு சுப்பிரமணியசாமியிடம் கேட்டதுடன், விரைந்து விசாரிக்க வேண்டும் என கேட்கிறீர்களா என்றும் வினவினர்.

அதைத்தொடர்ந்து சுப்பிரமணியசாமி தனது வாதத்தில், ஐகோர்ட்டில் 2007-ம் ஆண்டு ரிட் மனுவை தாக்கல் செய்தேன். ஆனால் அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றி விசாரிக்க மத்திய அரசு கோரியதன் அடிப்படையில், மனு தாக்கல் செய்தேன். சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தும்போது, சேது பாலத்தை ஒன்றும் செய்ய மாட்டோம் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. மேலும் ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கக் கோரும் விவகாரம் தொடர்பாக மத்திய கலாசாரத்துறை அமைச்சகம் என்னை அழைத்து கருத்து கேட்டது என வாதிட்டார்.

அப்போது நீதிபதிகள், தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கும் விவகாரம் மத்திய அரசின் கொள்கை சார்ந்தது இல்லையா என கேட்டனர்.

அதற்கு சுப்பிரமணியசாமி, இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது என வாதிட்டதுடன், இதில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏற்கெனவே பிரமாணபத்திரத்தை தாக்கல் செய்துள்ளதை குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுக்கள் மீதான விசாரணையை வேறு ஒரு தேதிக்கு தள்ளி வைத்தனர்.


Next Story