ராமர் கோவில் கனவு நனவானது...!! முடிவுக்கு வருகிறது மூதாட்டியின் 30 வருட மவுன விரதம்


ராமர் கோவில் கனவு நனவானது...!! முடிவுக்கு வருகிறது மூதாட்டியின் 30 வருட மவுன விரதம்
x
தினத்தந்தி 9 Jan 2024 7:47 AM GMT (Updated: 9 Jan 2024 8:51 AM GMT)

பிரதமர் மோடி ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டியதும், அன்று முழுவதும் அவர் அமைதியாகி விட்டார்.

தன்பாத்,

ஜார்க்கண்டில் வசித்து வருபவர் சரஸ்வதி தேவி (வயது 85). அயோத்தியில் ராமர் கோவில் கட்டி எழுப்பப்பட்ட மகிழ்ச்சியில் அவர் உள்ளார். இதற்காக 30 ஆண்டு காலம் அவர் மேற்கொண்ட மவுன விரதமும் முடிவுக்கு வரவுள்ளது. இதுபற்றிய பின்னணியை பார்க்கலாம்.

4 மகள்கள் உள்பட 8 குழந்தைகளுக்கு தாயான தேவியின் கணவர் தேவகிநந்தன் அகர்வால் 1986-ம் ஆண்டு காலமானார். அதன்பின்னர் தேவி, தன்னுடைய வாழ்வை கடவுள் ராமருக்கு அர்ப்பணித்து விட்டார். பெருமளவில், புனித பயணம் மேற்கொள்வதில் நேரம் செலவிட்டார். இந்த சூழலில், 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

அப்போது அவர் மவுன விரதம் மேற்கொள்ளும் சபதம் மேற்கொண்டார். ராமர் கோவில் கட்டப்பட்ட பின்னரே அதனை முடிப்பேன் என்று உறுதியும் எடுத்து கொண்டார் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.

இதனால், அயோத்தியில் மவுனி மாதா என தேவியை அழைக்க தொடங்கினர். அவர், குடும்பத்தினரிடம் சைகை மொழியிலேயே பேசுவது வழக்கம். சிக்கலான விசயங்களை எழுதி காட்டுவார்.

ஒரு நாளில் 23 மணிநேரம் மவுனம் விரதம் இருக்கும் அவர், நண்பகல் ஒரு மணிநேரம் பேசுவார். இது 2020-ம் ஆண்டு வரை தொடர்ந்தது. பிரதமர் மோடி அந்த ஆண்டில், ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டியதும், அன்று முழுவதும் அவர் அமைதியாகி விட்டார்.

இதுபற்றி அவருடைய இளைய மகனான ஹரே ராம் அகர்வால் (வயது 55) கூறும்போது, ராமர் கோவில் கட்டப்பட்ட மகிழ்ச்சியில் அதனை காண்பதற்காக தன்பாத்தில் இருந்து நேற்றிரவு புறப்பட்டு, சட்லெஜ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி சென்றார்.

வருகிற 22-ந்தேதி அவருடைய மவுன விரதம் முடிவுக்கு வரும் என்று ஹரே ராம் கூறியுள்ளார். ராமர் கோவிலுக்கு வரும்படி தேவிக்கு, மஹந்த் நிரிதிய கோபால் தாஸின் சீடர்கள் அழைப்பு விடுத்துள்ளனர் என்றார்.

2001-ம் ஆண்டு, மத்திய பிரதேசத்தில் 7 மாத கால தவத்தில் தேவி ஈடுபட்டார். இந்த பகுதியில் வனவாசத்தின்போது கடவுள் ராமர் அதிக காலம் செலவிட்டார் என நம்பப்படுகிறது.

அதிகாலை 4 மணிக்கு எழக்கூடிய வழக்கம் கொண்ட தேவி, 6 முதல் 7 மணிநேரம் தியானத்தில் ஈடுபடுவார். இதன்பின் மாலையில் சந்தியா ஆரத்தி முடித்து விட்டு, ராமாயணம் மற்றும் பகவத் கீதை போன்ற மத புத்தகங்களை அவர் படிப்பார்.

தினசரி ஒரு வேளை மட்டும் உணவு உண்ணும் அவர் காலை மற்றும் மாலையில் ஒரு தம்ளர் பால் குடிப்பார். அரிசி, பருப்புகள் மற்றும் ரொட்டி உள்ளிட்ட சைவ உணவையே அவர் உட்கொண்டு வருகிறார்.


Next Story