கே.எச்.முனியப்பாவுக்கும்,எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை- ரமேஷ்குமார் திட்டவட்டம்


கே.எச்.முனியப்பாவுக்கும்,எனக்கும் கருத்து வேறுபாடு இல்லை- ரமேஷ்குமார் திட்டவட்டம்
x

தனக்கும், முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பாவுக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் கூறினார்.

கோலார் தங்கவயல்:

தனக்கும், முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பாவுக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என்று முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமார் கூறினார்.

முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார்

கோலாரில் உள்ள அம்மவாரிபேட்டையில் பிரசித்தி பெற்ற ஜாமியா மசூதி உள்ளது. இங்கு நேற்று கர்நாடக மாநில முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் தனது ஆதவாளர்களுடன் சென்றார். அங்கு மசூதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கோலார் நகரில் மதக்கலவரங்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி மசூதி நிர்வாகிகள் ரமேஷ்குமாருக்கு கோரிக்கை விடுத்தனர்.

உடனே ரமேஷ்குமார் செல்போனில் கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவை தொடர்பு கொண்டு கோலாருக்கு வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ரமேஷ்குமாரின் கோரிக்கை ஏற்ற சித்தராமையா வருகிற 11-ந் தேதி கோலாருக்கு வருவதாக உறுதி அளித்தார்.

சித்தராமையா கோலாருக்கு வருகை

அதை தொடர்ந்து முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கோலாரில் இந்து, முஸ்லிம்கள் இடையே மதக்கலவரம் உருவாக்க சில அரசியில் கட்சியினர் சதி செய்து வருகின்றனர். அந்த மோதலை தடுக்கும் வகையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த சித்தராமையா வருகிற 11-ந் தேதி கோலாருக்கு வர முடிவு செய்துள்ளார். அவரை வரவேற்க தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

சித்தராமையா கோலாரில் போட்டியிடுவது குறித்து கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்யவேண்டும். எனது தொகுதியான சீனிவாசப் பூரை சித்தராமையாவுக்கு விட்டுக்கொடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்.

கருத்து வேறுபாடு இல்லை

எனக்கும், முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பாவுக்கும் எந்த வேற்றுமையும், கருத்து வேறுபாடும் இல்லை. காலம் வரும் போது இருவரும் ஒரே மேடையில் இருப்போம். அதில் எந்த சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதே எங்களின் குறிக்கோளாக உள்ளது.

சிலர் கே.எச்.முனியப்பாவுக்கும், எனக்கும் இடைவெளி இருப்பதாக கூறி வருகிறார்கள். அது தவறான தகவல்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story