இளம்பெண்ணை 7 ஆண்டுகளாக கற்பழித்த போலி சாமியார்


இளம்பெண்ணை 7 ஆண்டுகளாக கற்பழித்த போலி சாமியார்
x

குடும்ப பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி இளம்பெண்ணை 7 ஆண்டுகளாக போலி சாமியார் கற்பழித்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

பெங்களூரு:

குடும்ப பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி இளம்பெண்ணை 7 ஆண்டுகளாக போலி சாமியார் கற்பழித்த சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.

இளம்பெண் கற்பழிப்பு

பெங்களூரு கே.ஆர்.புரம் அருகே ஆவலஹள்ளி பகுதியில் ஒரு இளம்பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணின் வீட்டின் அருகே ஆனந்த மூர்த்தி என்பவர் ஆசிரமம் அமைத்தார். பின்னர் தன்னை சாமியார் என்று ஆவலஹள்ளி பகுதி மக்களிடம் ஆனந்த மூர்த்தி கூறி இருந்தார். இந்த நிலையில் ஆனந்த மூர்த்தியின் ஆசிரமத்திற்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண் சென்று இருந்தார். அப்போது இளம்பெண்ணிடம், ஆனந்த மூர்த்தி உனது குடும்பத்தில் பல்வேறு பிரச்சினை உள்ளது.

அந்த பிரச்சினையை நான் தீர்த்து வைக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய இளம்பெண் குடும்ப பிரச்சினைகள் தீர பூஜை செய்ய அந்த ஆசிரமத்திற்கு அடிக்கடி சென்று உள்ளார். அப்போது ஒரு முறை இளம்பெண்ணுக்கு போதைப்பொருள் கொடுத்து ஆனந்த மூர்த்தி கற்பழித்ததாக தெரிகிறது. மேலும் பலாத்கார காட்சிகளை அவர் செல்போனில் வீடியோ எடுத்து கொண்டதாகவும் தெரிகிறது. மேலும் அந்த வீடியோவை காட்டி இளம்பெண்ணை தொடர்ந்து ஆனந்த மூர்த்தி பலாத்காரம் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

போலி சாமியார்

இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு வேறு வாலிபருடன் சமீபத்தில் திருமண நிச்சயம் செய்யப்பட்டது. இதுபற்றி அறிந்த ஆனந்த மூர்த்தி இளம்பெண்ணிடம் 'உனது ஜாதகப்படி நீ என்னுடன் வாழ வேண்டும், வேறு ஒருவரை திருமணம் செய்ய கூடாது' என்று கூறியுள்ளார். ஆனால் இதனை ஏற்க இளம்பெண் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த மூர்த்தி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வீடியோவை திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபருக்கு அனுப்பி வைத்தார். அந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த வாலிபர் திருமணத்தை நிறுத்திவிட்டார்.

இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் கே.ஆர்.புரம் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்திய போது ஆனந்த மூர்த்தி போலி சாமியார் என்பதும், இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய ஆனந்த மூர்த்திக்கு அவரது மனைவி உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதனால் ஆனந்த மூர்த்தி, அவரது மனைவி மீது கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story