சிறுமி பலாத்காரம்:தாய் உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை
சிறுமி பலாத்கார வழக்கில், சிறுமியின் தாய், பெயிண்டர் உள்பட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து தட்சிணகன்னடா மாவட்ட கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மங்களூரு:-
சிறுமி பலாத்காரம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பகுதியில் 15 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வந்தார். அந்த சிறுமிக்கு தந்தை கிடையாது. இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெயிண்டரான டெர்வி டிசோசா என்பவர் சிறுமியின் வீட்டினருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதனால் அவர் அடிக்கடி அந்த வீட்டிற்கு சென்று வந்துள்ளார். மேலும், சிறுமியின் தாய்க்கு சில நேரங்களில் வேண்டிய பணத்தை கொடுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சிறுமி வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது வீட்டிற்குள் வந்த பெயிண்டர் சிறுமியை பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வெளியே கூறினால் கொன்றுவிடுவதாகவும் அவர் மிரட்டி உள்ளார். எனினும் அந்த சிறுமி தனது தாயிடம் இதுகுறித்து கூறி அழுதாள். அப்போது அதை அவரது தாய் கண்டு கொள்ளவில்லை மேலும் அவர், மகள் என்றும் பாராமல் சிறுமியை, டெர்வி டிசோசா தினமும் வீட்டிற்கு வந்து பலாத்காரம் செய்ய அனுமதித்து உள்ளார். அவரது தொடர் வருகையால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து சிறுமியின் தாயிடம் கேட்டுள்ளனர்.
ஓராண்டிற்கும் மேலாக...
இதையடுத்து. அங்கிருந்து தனது மகளுடன் வெளியேறிய அந்த பெண் உறவினரான மெல்வின் என்பவர் வீட்டில் தஞ்சம் அடைந்தார். எனினும், டெர்வி டிசோசா அந்த வீட்டிற்கும் வழக்கம் போல் வந்து சிறுமியை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த சம்பவம் ஓராண்டிற்கும் மேலாக நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள், வீட்டிற்குள் திடீர் சோதனை நடத்தினர். மேலும், பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை மீட்டனர். இதுதொடர்பாக உல்லால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தட்சிணகன்னடா மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
நீதிபதி உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று முன்தினம் தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியை பெயிண்டர் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே பெயிண்டருக்கு 15 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும், இந்த கொடூர சம்பவத்திற்கு உதவிய சிறுமியின் தாய்க்கு 14 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும், மெல்வினுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.