பலாத்காரம், சித்ரவதை, கொலை... சந்தேகத்தின் பலனாக குற்றவாளிகளை விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


பலாத்காரம், சித்ரவதை, கொலை... சந்தேகத்தின் பலனாக குற்றவாளிகளை விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x

19 வயது இளம்பெண் பலாத்காரம் மற்றும் கொடூர கொலை வழக்கில் சந்தேகத்தின் பலனாக குற்றவாளிகள் 3 பேரை விடுவித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.


புதுடெல்லி,


டெல்லியில் 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் 23 வயது துணை மருத்துவ மாணவி ஒருவர் 5 பேரால் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்படுத்தியதுடன், பாலியல் குற்றங்களில் சட்ட திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு குரல்கள் வலுத்தன.

இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, 2012-ம் ஆண்டு பிப்ரவரியில் அரியானாவின் ரேவரி மாவட்டத்தில் வயல்வெளியில், 19 வயது இளம்பெண் ஒருவரின் எரிந்த நிலையிலான உடல் கண்டெடுக்கப்பட்டது.

அவரது உடலில் கடுமையான காயங்கள் இருந்தன. காரில் உபயோகிக்கும் உபகரணங்கள் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட பானைகளை கொண்டு தாக்கியிருந்தது தெரிய வந்தது.

தீவிர விசாரணையில், இளம்பெண்ணின் கண்களில் அமிலம் ஊற்றியதும், அவரது அந்தரங்க உறுப்புகளில் மதுபான பாட்டிலை செருகியதும் தெரிய வந்தது.

2 ஆண்டு வழக்கு விசாரணைக்கு பின்பு, 2014-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் 3 பேரை குற்றவாளிகள் என அறிவித்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்த மனு மீது நடந்த விசாரணையில் டெல்லி ஐகோர்ட்டும் தீர்ப்பை உறுதி செய்தது.

தீர்ப்புக்கு எதிராக ரவி குமார், ராகுல் மற்றும் வினோத் என குற்றவாளிகள் 3 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி யூ.யூ. லலித் தலைமையிலான அமர்வு விசாரணை மேற்கொண்டது. நீதிபதி ரவீந்திரா பட் மற்றும் நீதிபதி பேலா எம். திரிவேதி ஆகியோரும் அமர்வில் இடம் பெற்றிருந்தனர்.

அதில், 3 பேருக்கு எதிராக சந்தேகத்திற்குரிய காரணங்களை கடந்து குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வழக்கறிஞர் தரப்பு தவறி விட்டது. விசாரணை நீதிமன்றமும் 3 பேருக்கு தீர்ப்பு வழங்கும்போது, கடந்து செல்லும் நடுவர் போன்று செயல்பட்டு உள்ளது.

49 சாட்சிகளில் 10 பேரிடம் குறுக்கு விசாரணை மேற்கொள்ளவில்லை என சுட்டி காட்டிய சுப்ரீம் கோர்ட்டு, விசாரணையில் நிறைய விசயங்கள் விடப்பட்டு உள்ளது தெளிவாக தெரிகிறது என தெரிவித்தது.

வெளிப்புற நன்னடத்தை நெருக்கடி அல்லது அது போன்ற வேறு எந்தவொரு விசயத்திற்கும் கோர்ட்டு ஆட்பட்டு விட கூடாது என தெரிவித்தது. இந்த 3 பேருக்கு எதிராக வழக்கை நிரூபிக்க வழக்கறிஞர் தரப்பு தவறி விட்டது. அதனால், சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு அளித்து வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் தெரிவித்தது.

பாதிப்படைந்த பெண் மட்டுமின்றி, சமூகத்திற்கு எதிராக குற்றம் நடந்து உள்ளது என டெல்லி போலீசார் கூறியதுடன், மரண தண்டனையை குறைக்கும் 3 பேரின் மேல்முறையீட்டுக்கு எதிர்ப்பும் தெரிவித்தனர்.

எனினும், குற்றவாளிகளின் தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, 3 பேரின் வயது, குடும்ப பின்னணி, அவர்களின் கடந்த கால குற்ற பதிவு ஆகியவற்றை கவனத்தில் கொண்டு தண்டனையை குறைக்கும்படி வாதம் செய்துள்ளார்.

இந்த தீர்ப்பினால், மனமுடைந்து போன பெண்ணின் பெற்றோர், தங்களது சட்ட போராட்டம் தொடரும் என கூறியுள்ளனர். நீதி கேட்டு வந்தோம். இது பார்வையற்ற நீதி முறையாக உள்ளது என அவர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.


Next Story