மக்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் கைதாக தயார்...!- ராகுல் காந்தி


மக்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் கைதாக தயார்...!- ராகுல் காந்தி
x

விலைவாசி உயர்வை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய பிரியங்கா காந்தியை டெல்லி போலீசார் கைது செய்ததனர்.

புதுடெல்லி:

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் அமலாக்கத்துறை சோதனையை கண்டித்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்து காங்கிரசார் மனு கொடுக்க குவிந்தனர்.

பிரதமர் மோடி வீட்டையும் முற்றுகையிடும் போராட்டத்துக்காக காங்கிரசார் திரண்டதால் பதற்றம் உருவானது. போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரசார் போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் மீறி காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக டெல்லி நாடாளுமன்ற வளாகத்திலிருந்து ஜனாதிபதி மாளிகை நோக்கி காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள். பேரணி நடத்தினர். பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் பேரணி நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டுத் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டனர்.

கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேலாக நாடாளுமன்றம் – ஜனாதிபதி மாளிகைக்கு இடையே உள்ள விஜய்ஸ்சவுக் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தடுத்து வைக்கப்பட்டார்.மக்களுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் போராட்டம் நடத்தி எத்தனை முறை வேண்டுமானாலும் கைதாகுவதற்குத் தயார் என ராகுல் காந்தி கூறினார்.

இந்த பேரணியின் போது காங்கிரஸ் கட்சியின் கரூர் எம்.பி. ஜோதிமணி மத்திய அரசுக்கு எதிராகத் தொடர் முழக்கங்களை எழுப்பிய நிலையில் அவரை டெல்லி போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அப்போது பேசிய ஜோதிமணி விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மைக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும் எனக் கூறினார்.

இதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அப்போது, செவியே இல்லாத மத்திய அரசு எவ்வாறு இந்த பிரச்சனை மீது மட்டும் அவர்கள் செவி சாய்ப்பார்கள் எனவும், மக்களுடைய உணர்வு, துன்பம், பிரச்சனை மற்றும் சுமைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இருப்பதாகத் தெரிவித்தார்.

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், ஜி.எஸ்.டி உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்து முற்றுகை போராட்டம் நடத்த முற்பட்டபோது போலீசார் எங்களைக் கைது செய்கின்றனர்.ஆனால், எந்த கைது நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து போராடுவோம் என விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்தார்

இந்நிலையில், கைது செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் மற்றும் மக்களவை மற்றும் மாநிலங்களவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் டெல்லி கிங்ஸ் வே காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுத் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

1 More update

Next Story