முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் பிணம் மீட்பு; கற்பழித்து கொலையா? போலீஸ் விசாரணை
சிக்பள்ளாப்பூரில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண் பிணம் மீட்கப்பட்டுள்ளது. அவர் கற்பழித்து கொலை செய்யபட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிக்பள்ளாப்பூர்:
அரைநிர்வாண நிலையில்...
சிக்பள்ளாப்பூர் புறநகர் சித்ராவளி பகுதியில் உள்ள கல்லூரி அருகே உள்ள காலி நிலத்தில் அரை நிர்வாணமாக பெண் பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிக்பள்ளாப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வாசுதேவ், சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
அப்போது முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அரை நிர்வாணமாக பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதையடுத்து அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
கற்பழித்து கொலையா?
அவர் யார்? எந்தப்பகுதியை சேர்ந்தவர்? போன்ற எந்த விவரமும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. மேலும் அவரை யாரோ மர்மநபர்கள் கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என்றும், அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை சிதைத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
அந்த பெண்ணுக்கு சுமார் 30 வயது இருக்கலாம் என்றும், அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் போல் தெரிவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.