விமானத்தில் நாயை ஏற்ற மறுப்பு; பயணத்தை ரத்து செய்த தனியார் நிறுவன அதிகாரி


விமானத்தில் நாயை ஏற்ற மறுப்பு; பயணத்தை ரத்து செய்த தனியார் நிறுவன அதிகாரி
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விமானத்தில் நாயை ஏற்ற மறுத்ததால், குடும்பத்தினருடன் செல்ல இருந்த சுற்றுலாவை தனியார் நிறுவன அதிகாரி ரத்து செய்து உள்ளார். இதனால் ரூ.4 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்து உள்ளார்.

தேவனஹள்ளி:

நாய்க்கு சான்றிதழ்

பெங்களூரு வர்த்தூர் பகுதியில் வசித்து வருபவர் சச்சின் செனாய். இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மனிதவள அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி, மகளுடன் 12 நாட்கள் சுற்றுலாவாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் செல்ல முடிவு செய்து இருந்தார். இதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பே சச்சின் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து இருந்தார்.

சுற்றுலா செல்லும் போது தான் வீட்டில் வளர்த்து வரும் நாயையும் அழைத்து செல்ல சச்சின் நினைத்து இருந்தார். இதற்காக அவர் விமான நிலையத்திற்குள் நுழையவும், விமானத்தில் பயணிக்க உடல்ரீதியாக தயாரானது என்றும் நாய்க்கும் சான்றிதழ்கள் வாங்கி இருந்தார். இந்த நிலையில் விமானம் மூலம் டெல்லிக்கு செல்ல சச்சின், அவரது மனைவி, மகள் ஆகியோர் தங்களது நாயுடன் விமான நிலையத்திற்கு வந்தனர்.

விமானத்தில் ஏற்ற மறுப்பு

விமான நிலையத்தில் அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட்டு விமானத்தில் ஏற முயன்றனர். அப்போது சச்சினுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் விமானி அதிர்ச்சி அளித்தார். அதாவது விமானத்தில் நாயை ஏற்ற விமானி மறுத்தார். விமானத்தில் இருந்து நாயை இறக்கினால் தான் விமானத்தை எடுப்பேன் என்று கறாராக கூறிவிட்டார்.

நாயை விமானத்தில் அழைத்து செல்ல சான்றிதழ் வாங்கி இருப்பதாக சச்சின் எடுத்து கூறியும் விமானி ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் சச்சின் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்களது சுற்றுலா பயணத்தை ரத்து செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பினர். இந்த நிலையில் சம்பவம் தொடர்பான வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து உள்ள சச்சின், ''திமிர்பிடித்தவிமானி டி.கே.சோப்ரா'' என்று ஹேஸ்டேக்கில் கூறியுள்ளார். மேலும் தனது விமான பயணத்தை ரத்து செய்ததால் ரூ.4 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாகவும் சச்சின் வேதனை தெரிவித்துள்ளார்.


Next Story