ஆண்டர்சன்பேட்டை, ராபர்ட்சன்பேட்டை சாலையில் தெரு மின்விளக்குகள் சீரமைப்பு


ஆண்டர்சன்பேட்டை, ராபர்ட்சன்பேட்டை சாலையில் தெரு மின்விளக்குகள் சீரமைப்பு
x
தினத்தந்தி 19 Sep 2023 6:45 PM GMT (Updated: 19 Sep 2023 6:46 PM GMT)

ஆண்டர்சன்பேட்டை, ராபர்ட்சன்பேட்டை சாலையில் ரூ.25 லட்சம் செலவில் தெரு மின்விளக்குகளை சீரமைக்கும் பணி நடந்தது.

கோலார் தங்கவயல்

நகரசபை நிர்வாகத்திடம் புகார்

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் டவுன் பகுதியாக திகழ்வது ஆண்டர்சன்பேட்டை. வெளியூர்களில் இருந்து வரும் பஸ்கள் ராபர்ட்சன்பேட்டை, ஆண்டர்சன்பேட்டை மார்க்கமாக தமிழ்நாடு கிருஷ்ணகிரி, ஆந்திர மாநிலம் குப்பம் ஆகிய ஊர்களுக்கு செல்கின்றன.

இந்த சாலையில் நீண்ட நாட்களாக தெருவிளக்குகள் பழுதடைந்து உள்ளது.

இதனால் அந்த சாலையை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த 33-வது வார்டு கவுன்சிலர் சிவாஜி, இதுபற்றி பலமுறை நகரசபை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். மேலும் தெரு மின்விளக்குகளை சரிசெய்யும்படி கோரிக்கை விடுத்தார்.

தெரு மின் விளக்குகள்

இந்த நிலையில் கவுன்சிலர் சிவாஜியின் கோரிக்கையை ஏற்று நகரசபை கமிஷனர் பவன்குமார் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க உத்தரவிட்டார்.

அதன்பேரில் நேற்று அந்த சாலையில் உள்ள தெரு மின்விளக்குகளை சீரமைக்கும் பணி நடந்தது. ஆண்டர்சன்பேட்டை போலீஸ் நிலையம் உள்பட முக்கிய இடங்களில் தெரு மின்விளக்குகளை சரிசெய்யும் பணி நடந்தது.

இந்த பணியை கவுன்சிலர்கள் சிவாஜி, சனா என்கிற சசிதரன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர். பின்னர் இதுபற்றி கவுன்சிலர் சிவாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.25 லட்சம் செலவில்...

கோலார் தங்கவயலில் இருந்து தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம், ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் சாலைகளில் பழுதடைந்துள்ள தெரு மின்விளக்குகளை ரூ.25 லட்சம் செலவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்த பணி விரைவில் முடிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story