மஹுவா மொய்த்ரா மீதான பரிந்துரை அறிக்கை விவகாரம்; எதிர்கட்சிகள் கடும் அமளி

மஹுவா மொய்த்ராவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நாடாளுமன்ற நெறிமுறைக்குழு பரிந்துரைத்து இருக்கிறது.
Image Courtesy : ANI
Image Courtesy : ANI
Published on

புதுடெல்லி,

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி நிறுவனங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைக்குழு மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது. இதன் முடிவில் அவரை எம்.பி. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்து இருக்கிறது.

இந்த பரிந்துரை அறிக்கை மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பரிந்துரை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் விரிவான விவாதத்துக்கு அனுமதி கேட்கப்படும் என பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி கூறினார்.

மக்களவையில் தாக்கல் செய்யப்படும் பரிந்துரை அறிக்கைக்கு பெருவாரியான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தால், மஹுவா மொய்த்ரா எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார். முன்னதாக, இதன்மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 6-4 என்ற கணக்கில் பரிந்துரை நிறைவேறியது. அதே சமயம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் பெண் எம்.பி.க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று மக்களவையில் கேள்வி நேரம் தொடங்கியபோது, மஹுவா மொய்த்ரா எம்.பி. மீதான பரிந்துரை அறிக்கை குறித்து காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குறிப்பிட்டு பேசினார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஓம் பிர்லா, இந்த விவகாரம் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், கேள்வி நேரத்தின்போது இது தொடர்பாக விவாதிக்கலாம் என்றும் கூறினார்.

இதனிடையே எதிர்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார். தொடர்ந்து மக்களவை கூடி விவாதம் நடைபெற்று வருகிறது. 

X

Daily Thanthi
www.dailythanthi.com