வனப்பகுதியில் தேனுக்கு ஆசைப்பட்டு பாறை இடுக்கில் சிக்கிய நபர்: பல மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்பு!
வனப்பகுதிக்கு அருகே பாறை இடுக்கில் செல்போனை தவறி விட்டு அதனை எடுக்க முயன்றபோது அந்த நபர் பாறைகளுக்கு இடையே 40 மணி நேரம் சிக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஐதாரபாத்,
தெலுங்கானா மாநிலம் ரெட்டிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜூ இவர் கடந்த 13-ம் தேதி வனப்பகுதிக்கு தேன் எடுக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர் தேனை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது பாறை இடுக்கில் அவரது செல்போன் தவறி விழுந்துள்ளது. அப்போது செல்போனை எடுக்க முயன்றபோது அவரும் பாறைக்குள் தவறி விழுந்தார். வெளியே வர பல்வேறு முயற்சிகள் செய்தும் அவரால் வெளியே வர முடியவில்லை. பாறை இடுக்கில் அவர் வசமாக சிக்கிக்கொண்டார்.
தாம் சிக்கிக்கொண்டது குறித்து செல்போனில் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியில் முடிந்தது. முடிவாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த வந்த போலீசார் கற்பாறைகளை உடைக்கும் கருவிகள் கொண்டு வரப்பட்டு சுமார் 40 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவர் உயிருடன் மீட்கப்பட்டார்.
பல மணி நேர போராட்டத்திற்கு பின், பாறைகளை உடைத்து ராஜூவை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது போன்ற விபரீத செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என போலீசார் அந்த கிராம மக்களுக்கு அறிவுரை கூறி புறப்பட்டு சென்றனர்.