3 ஆண்டுகளில் 64 வழக்குகள் பதிவு: கர்நாடகத்தில் அதிகரிக்கும் மதமோதல்கள்


3 ஆண்டுகளில் 64 வழக்குகள் பதிவு:  கர்நாடகத்தில் அதிகரிக்கும் மதமோதல்கள்
x

கர்நாடகத்தில் மதமோதல்கள் அதிகரித்து வருகிறது.

பெங்களூரு: கர்நாடகத்தில் சமீப ஆண்டுகளாக மதமோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதுபோல் மத பிரச்சினை தொடர்பாக படுகொலை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, பொதுஅமைதிக்கு பங்கம் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்த ஆண்டில் மட்டும் சிவமொக்கா டவுன் ரிப்பன்பேட்டையை சேர்ந்த ஹர்ஷா என்ற பஜ்ரங்தள தொண்டர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கருதி இதுபற்றி தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது.

உருது மொழி

அதுபோல் பெங்களூருவில் உருது மொழி பேசவில்லை என தமிழகத்தை சேர்ந்த சந்துரு என்ற வாலிபர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி இரவில் தட்சிணகன்னடா மாவட்டம் சுள்ளியா அருகே நெட்டார் கிராமத்தை சேர்ந்த பா.ஜனதா இளைஞர் அணி பிரமுகர் பிரவீன் நெட்டார் என்பவரை மர்மநபர்கள் படுகொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

மாநிலத்தில் தொடர்ச்சியாக இந்து அமைப்பு நிர்வாகிகள் படுகொலை செய்யப்படுவதாகவும், ஆனால் கொலையாளிகளை கண்டுபிடித்து கடும் தண்டனை வாங்கி கொடுக்கப்படவில்லை என்றும், தற்போது ஆளுங்கட்சியான பா.ஜனதா இருந்தபோதிலும் இதுபோன்ற கொலைகளை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பஜ்ரங்தள, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

குற்றப்பத்திரிகை தாக்கல்

இதனால் கர்நாடக அரசு இந்து அமைப்பினர் கொலையை தடுக்கவும், ஏற்கனவே நடந்த கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்று கொடுக்கவும் கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இதுஒருபுறம் இருக்க கர்நாடகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை மதரீதியிலாக 63 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 36 வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளது. மேலும் 14 வழக்குகளில் போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு 12 வழக்குகளும், 2020-ம் ஆண்டு 21 வழக்குகளும், 2021-ம் ஆண்டு 23 வழக்குகளும் மாநிலத்தில் பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு 7 வழக்குகள் பதிவாகியுள்ளது.

போதிய ஆதாரங்கள் இல்லை

குறிப்பாக தட்சிணகன்னடா மாவட்டம் விட்டலா போலீஸ் நிலைய பகுதியில் கடந்த 2020-ம்ஆண்டு ஒரு வழக்கும், இரெஹெரூர் போலீஸ் நிலையத்தில் 2019-ம் ஆண்டு ஒரு வழக்கும் உள்ளது. இதில் இரெஹெரூர் போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் போலீசார் 'பி' அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். விட்டலா போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில், 'சி' அறிக்கை (தவறான தகவல் அளித்ததாக) தாக்கல் செய்துள்ளனர்.

இதுபோன்ற மதமோதல் தொடர்பான வழக்குகளில் 65 வழக்குகள் தள்ளுபடியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சாட்சியங்கள் கோர்ட்டில் வாக்குமூலம் அளிக்காதது, போதிய ஆதாரங்கள் கிடைக்காதது, கைதானவர்கள் குழப்பமான தகவல்களை கொடுப்பது, விசாரணை அதிகாரிகளின் அலட்சியம், கைதானவர்கள் சரியான முகவரி கொடுக்காததால் சம்மன் கொடுப்பதில் சிக்கல் உள்ளிட்டவையே இதற்கு காரணம் என்று போலீசார் கூறுகிறார்கள்.

சிவமொக்கா மாவட்டத்தில்...

கர்நாடகத்தை பொறுத்தவரை கடந்த 3 ஆண்டுகளில் மதமோதல் தொடர்பாக சிவமொக்கா மாவட்டத்தில் 12 வழக்குகளும், தட்சிணகன்னடா மாவட்டத்தில் 11 வழக்குகளும் பதிவாகி உள்ளது. ஹாவேரி மற்றும் பாகல்கோட்டை மாவட்டங்களில் தலா 10 வழக்குகள் பதிவாகியுள்ளது.


Next Story