ராஜஸ்தான்: பஸ்சை மறித்து துணிகர கொள்ளை; தடுத்த பயணிகள் மீது சரமாரி தாக்கு
ராஜஸ்தான் மாநிலத்தில் பேருந்தை மறித்து கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டம் பிலாஸ்பூர் நகருக்கு அருகே கே.எம்.பி. எக்ஸ்பிரஸ் சாலையில் பயணிகளுடன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்சை பின் தொடர்ந்து வந்த கார் பஸ்சின் முன்பு வந்து நின்றது. பின்னர் அந்த காரில் இருந்து இறங்கிய 6 பேரை கொண்ட கும்பல் பஸ் கண்ணாடியை அடித்து நொறுக்கியது.
அதை தொடர்ந்து பஸ்சுக்குள் நுழைந்த கும்பல் பயணிகளை மிரட்டி பணம், நகை உள்ளிட்டவற்றை பறிக்க முயன்றது. இதை தட்டிக்கேட்ட பஸ் கண்டக்டர் மற்றும் பயணிகளை அந்த கும்பல் சரமாரியாக தாக்கியது.
பின்னர் அந்த கும்பல் கண்டக்டரின் பணப்பையை பறித்துக்கொண்டு தப்ப முயன்ற நிலையில் அவர்களில் 2 பேரை பயணிகள் மடக்கி பிடித்தனர். இருப்பினும் மற்ற 4 பேரும் கண்டக்டரின் பணப்பையுடன் காரில் ஏறி தப்பி சென்றனர். அந்த பையில் சுமார் ரூ.27 ஆயிரம் இருந்ததாக காயமடைந்த கண்டக்டர் தெரிவித்தார்.
இதற்கிடையில் இந்த வழிப்பறி குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பயணிகள் பிடித்து வைத்திருந்த 2 வழிப்பறி கொள்ளையர்களை கைது செய்தனர். அவர்களிடம் தப்பி சென்ற கூட்டாளிகள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.