ரவுடி, கத்தியால் குத்தி கொலை

உப்பள்ளியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவுடி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
உப்பள்ளி-
குடிபோதையில் தகராறு
உப்பள்ளி டவுன் கசபாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது நண்பா் பழயை உப்பள்ளியை சேர்ந்த சிவா நாயக் (வயது 35). ரவுடிகளான இவர்கள் மீது உப்பள்ளியில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் பல வழக்குகளில் அவர்கள் சிறை சென்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் 2 பேரும் கசபாபேட்டையில் உள்ள மதுபான விடுதியில் ஒன்றாக மது அருந்தினர். பின்னர் வெளியே வந்த அவர்களுக்குள் குடிபோதையில் திடீரென்று தகராறு ஏற்பட்டது.
ரவுடி கொலை
அப்போது ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அந்த சமயத்தில் சிவா நாயக் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தோசை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த சந்தோஷ், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவா நாயக், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கசபாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான சந்தோசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சந்தோசை அவரது நண்பர் சிவா நாயக் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.
நண்பர் கைது
இதுகுறித்து கசபாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவாவில் தலைமறைவாக இருந்த சிவா நாயக்கை கைது செய்தனர். மேலும் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.