மராட்டியம்: கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும்-பிரதமர் மோடி


மராட்டியம்: கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும்-பிரதமர் மோடி
x

மராட்டியத்தில் கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் மும்பை - நாக்பூரை இணைக்கும் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் 3ம் கட்டப்பணிகள் தானே மாவட்டத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தானே மாவட்டத்தின் ஷகல்பூர் தாலுகா சர்லம்பி கிராமத்தில் சாலை அமைப்பதற்கான மேம்பாலம் கட்டும்பணிகள் இன்று அதிகாலை நடைபெற்று வந்தன. மேம்பாலத்தின் பாகங்களை தூக்கி வைக்க ராட்சத கிரேன் எந்திரம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

தொழிலாளர்கள் இன்று அதிகாலை வேலை செய்து கொண்டிருந்தபோது கிரேன் எந்திரம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 15 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து நடந்த பகுதியில் இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். மேலும் விபத்தில் காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து பாதித்தோருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story