மங்களூரு விமான நிலையத்தில் ரூ.4 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்


மங்களூரு விமான நிலையத்தில் ரூ.4 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 3 Dec 2022 6:45 PM GMT (Updated: 3 Dec 2022 6:45 PM GMT)

மங்களூரு விமான நிலையத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் ரூ.4 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மங்களூரு:

மங்களூரு விமான நிலையம்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பஜ்பே பகுதியில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து பெங்களூரு, மும்பை, சென்னை, டெல்லி போன்ற உள்நாடுகளுக்கும், துபாய், மலேசியா, சவுதி அரேபியா உள்ளிட்ட ெவளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் விமானத்தில் தங்கம், போதைப்பொருள் ஆகியவற்றை கடத்துவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானங்களில் வரும் பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையும் தங்கம், போதைப்பொருள், வெளிநாட்டு பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

ரூ.4 கோடி தங்கம்

இந்த நிலையில் மங்களூரு விமான நிலையத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்த ரூ.4 கோடி மதிப்பிலான 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விமான நிலைய நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மங்களூரு விமான நிலையத்துக்கு கடந்த நவம்பர் மாதம் 1-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை துபாயில் இருந்து வந்த பல்வேறு விமானங்களில் தங்கம் கடத்தி வந்ததாக 10 பேரை கைது செய்துள்ளோம். அவர்கள் தங்களது உடைமைகளில் மறைத்து வைத்தும், பேஸ்ட் போன்று உருக்கியும், சூட்கேசில் வைத்தும் என பல விதங்களில் தங்கத்தை கடத்தி வந்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.4 கோடியே ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 280 மதிப்பிலான 7 கிலோ 692 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம் கடத்தி வந்த 10 பேரும் பஜ்பே போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story