அரசு பஸ் டெப்போ மேலாளரிடம் ரூ.50 லட்சம் முன்பணம் வழங்கிய ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ.


அரசு பஸ் டெப்போ மேலாளரிடம் ரூ.50 லட்சம் முன்பணம் வழங்கிய ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ.
x

கோலார் தங்கவயலில் இருந்து மேல்மருவத்தூர், சபரிமலை கோவில்களுக்கு பக்தர்கள் இலவசமாக சென்று வர வசதியாக தங்கவயல் அரசு பஸ் டெப்போ மேலாளரிடம் ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. ரூ.50 லட்சத்தை முன்பணமாக வழங்கினார்.

கோலார் தங்கவயல்:-

ரூ.50 லட்சம் முன்பணம்

கோலார் தங்கவயல் மக்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவில், சபரிமலை கோவில்களுக்கு அரசு பஸ்களில் இலவசமாக சென்று வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தங்கவயல் எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதர் அறிவித்து இருந்தார். அதன்படி, தங்கவயல் மக்கள் கோவில்களுக்கு சென்று வர வசதியாக கோலார் தங்கவயல் கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் டெப்போ மேலாளரிடம் முன்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை வெங்கடேச பெருமாள் கோவிலில் நடந்த இந்த நிகழ்ச்சியில், ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ., நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி ஆகியோர் தங்கவயல் அரசு பஸ் டெப்போ மேலாளர் பாஸ்கரிடம் ரூ.50 லட்சம் முன்பணத்தை வழங்கினர்.

ஆலோசனை

இதையடுத்து கோவில் வளாகத்தில், பக்தர்கள் அரசு பஸ்சில் இலவசமாக கோவில்களுக்கு அழைத்து செல்லப்படுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, தங்கவயலில் இருந்து அரசு பஸ்களில் மேல்மருவத்தூர், சபரிமலைக்கு பக்தர்கள் அழைத்து செல்லப்படும்போது, வழியில் உள்ள கோவில்களுக்கும் அவர்கள் சென்றுவர அனுமதிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், கோலார் தங்கவயலில் இருந்து மேல்மருவத்தூர், சபரிமலைக்கு பக்தர்கள் அரசு பஸ்களில் இலவசமாக சென்று வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தங்கவயல் அரசு பஸ் டெப்போ மேலாளரிடம் ரூ.50 லட்சம் முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பக்தர்கள் கோவில்களுக்கு அரசு பஸ்சில் இலவசமாக அழைத்து செல்லப்படுவார்கள். இதற்கான திட்டம் விரைவில் வகுக்கப்படும் என்றார்.


Next Story