சபரிமலை கோவிலில் தங்க மேற்கூரை பராமரிப்பு பணி தொடக்கம்: 3 நாட்களுக்குள் முடிக்க திட்டம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்க மேற்கூரை பராமரிப்பு பணி தொடங்கி உள்ளது.
திருவனந்தபுரம்,
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மழைக்காலங்களில் கோவில் கருவறை பகுதிக்கு மேலே உள்ள தங்க மேற்கூரையில் 13 இடங்களில் லேசான நீர் கசிவு கண்டு பிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மேற்கூரையை சரி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பி.பி. அனந்தன் ஆச்சாரி தலைமையில் மேற்கூரையில் ஏற்பட்டுள்ள நீர் கசிவை சரி செய்யும் பராமரிப்பு பணிகள் தொடங்கியது. இந்த பணிகளை திருவாபரணம் கமிஷனர் ஜி.பைஜூ, தலைமை பொறியாளர் ஆர். அஜித்குமார், லஞ்சஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணியம், செயல் அதிகாரி எச். கிருஷ்ணகுமார், செயற்பொறியாளர் ரஞ்சித் சேகர், ஐகோர்ட்டு மேற்பார்வை அதிகாரி பி.குருப் ஆகியோர் கண்காணித்து வருகிறார்கள்.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 6-ந்தேதி திறக்கப்படுகிறது. இந்த நிலையில் மேற்கூரை சீரமைப்பு பணிகளை இன்னும் 3 நாளில் முடிக்க திட்டமிட்டு உள்ளதாக தேவஸ்தான தலைவர் அனந்தகோபன் தெரிவித்தார்.