'அக்னிபத்' திட்டத்துக்கு எதிராக இன்று முதல் நாடு தழுவிய பிரசாரம்; விவசாய அமைப்புகள் அறிவிப்பு


அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இன்று முதல் நாடு தழுவிய பிரசாரம்; விவசாய அமைப்புகள் அறிவிப்பு
x

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாடு தழுவிய பிரசாரத்தை மேற்கொள்ள இருப்பதாக விவசாய அமைப்புகள் அறிவித்து உள்ளன.

அக்னிபத் திட்டம்

முப்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்க வகை செய்யும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இந்த திட்டத்தை வேளாண் அமைப்புகள் தொடக்கம் முதலே எதிர்த்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக விவசாய அமைப்புகள் அறிவித்து உள்ளன. இதில் முன்னாள் ராணுவ வீரர்களின் ஐக்கிய முன்னணி உள்பட பல்வேறு அமைப்புகளும் பங்கேற்கின்றன.

இது தொடர்பாக பல்வேறு வேளாண் அமைப்புகளின் ஒருங்கிணைந்த அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மிகப்பெரிய பின்னடைவு

ஆயுதப் படைகளுக்கு வழக்கமான, நிரந்தர ஆட்சேர்ப்புக்கான முயற்சி மற்றும் சோதனை முறைக்கு அக்னிபத் திட்டம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது ஆயுதப்படைகளின் எண்ணிக்கையை தற்போது அனுமதிக்கப்பட்ட 14 லட்சத்தில் இருந்து 7 லட்சமாக குறைக்கும்.

இது தங்கள் பிள்ளைகளை ஆயுதப்படைகளுக்கு அனுப்பி நாட்டுக்கு பங்களித்து வரும் விவசாயிகளுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஆகும். தலைமுறைகளாக ராணுவத்துக்கு பங்களிப்பை வழங்கி வரும் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு உத்தரபிரதேசம், கிழக்கு ராஜஸ்தான் பிராந்தியங்களை கடுமையாக பாதிக்கும்.

வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்

எனவே நிலுவையில் உள்ள சுமார் 1.25 லட்சம் காலிப்பணியிடங்கள், நடப்பு ஆண்டின் 60 ஆயிரம் காலியிடங்களை வழக்கமான நிரந்தர ஆட்சேர்ப்பு முறையில் உடனடியாக நிரப்ப இந்த பிரசாரம் கோரிக்கை வைக்கும்.

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும், கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுவிக்கப்பட வேண்டும், பாதுகாப்புத்துறையில் தனியார்மயம் தவிர்க்கப்பட வேண்டும், தேசிய பாதுகாப்புக்கு அரசே பொறுப்பேற்று ஆயுதப்படைகளின் கவுரவத்தை பாதுகாக்க வேண்டும் என இந்த பிரசாரம் வலியுறுத்தும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

பிரசாரத்தின் நோக்கம்

இந்த பிரசாரத்தின் முதல் படியாக, இன்று முதல் வருகிற 14-ந்தேதி வரை 'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' மாநாடு நடத்தப்படுவதாக சுவராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் கூறினார்.

அக்னிபத் திட்டத்தின் பேரழிவு விளைவுகளைப் பொதுமக்களுக்கு எடுத்துரைத்து ஜனநாயக முறையில், அதை திரும்பப்பெற மத்திய அரசை கட்டாயப்படுத்துவதை இந்த பிரசாரம் நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும்தெரிவித்தார்.


Next Story