சகோதரிக்கு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபாிடம் ரூ.10 லட்சம் மோசடி


சகோதரிக்கு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபாிடம் ரூ.10 லட்சம் மோசடி
x

குந்தப்புரா அருகே சகோதரிக்கு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த நண்பரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

மங்களூரு;

அரசு வேலை வாங்கி தருவதாக...

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா திராசி கிராமத்தை சேர்ந்தவர் ரெஹான் மன்சில். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த லத்தேஷ் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் ரெஹானின் சகோதரி சபீனா வேலை தேடி கொண்டிருந்தார்.

மேலும் தன் சகோதரிக்காக ரெஹானும் தனக்கு தெரிந்தவர் களிடம் வேலைக்காக கேட்டு வந்துள்ளார். இந்த நிலையில் லத்தேஷ், ரெஹானிடம் தனக்கு அரசியல் பிரமுகர்கள் உடன் பழக்கம் இருப்பதாக கூறி அவர்களுடன் சேர்ந்து தான் எடுத்த புகைப்படங்களை காட்டியுள்ளார்.

இதையடுத்து அவர்களுடன் பேசி சபீனாவிற்கு அரசு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.10 லட்சம் தேவைப்படும் என்றும் கூறியுள்ளார்.

ரூ.10 லட்சம் மோசடி

இதனை நம்பிய ரெஹான், தன்னிடம் இருந்த நகைகளை விற்றும், கடன் வாங்கியும் ரூ.10 லட்சத்தை லத்தேசின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி உள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் லத்தேஷ் அரசு வேலை வாங்கி தாராமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து ரெஹான், லத்தேசிடம் கேட்டபோது அவர் சரியான பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர், லத்தேசிடம் பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார்.

இதையடுத்து லத்தேஷ், ரூ.6 லட்சத்திற்கான காசோலையை அவரிடம் கொடுத்துள்ளார். அந்த காசோலையை ரெஹான் வங்கியில் கொடுத்துள்ளார். இதை சரிபார்த்த வங்கி அதிகாரிகள் அந்த கணக்கில் பணம் இல்லை என கூறியுள்ளனர்.

அப்போது தான் சகோதரிக்கு, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லத்தேஷ் பண மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ரெஹான், கங்கொல்லி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். மேலும் தலைமறைவாக உள்ள லத்தேசை வலைவீசி தேடிவருகின்றனர்.


Next Story