இஸ்ரோ உளவு விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கு கேரள ஐகோர்ட்டு வழங்கிய முன்ஜாமீன் ரத்து - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
இஸ்ரோ உளவு விவகாரம் தொடர்பான வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை எதிர்த்து சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
புதுடெல்லி,
விஞ்ஞானி நம்பி நாராயணன் இஸ்ரோவில் இருந்தபோது பல ஆய்வுகளை மேற்கொண்டார். நாட்டின் விண்வெளி ஆராய்ச்சியிலும் முக்கியப் பங்காற்றினார்.
அவர் பாகிஸ்தானுக்கு ஊழல் மற்றும் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 1994 ஆம் ஆண்டில், ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்கள் தொடர்பான ரகசிய தகவல்களை உளவு பார்த்ததாக நாராயணன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், பல ஆண்டுகள் சிறையில் இருந்து, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, சுப்ரீம் கோர்ட்டால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இஸ்ரோ உளவு விவகாரம் தொடர்பான வழக்கில் கேரள முன்னாள் டிஜிபி சிபி மேத்யூஸ் உட்பட நான்கு குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை எதிர்த்து சிபிஐ வழக்கு தொடர்ந்தது. கேரள ஐகோர்ட்டின் ஜாமீன் உத்தரவை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு, கேரள ஐகோர்ட்டு தீர்ப்பை நிராகரித்து உத்தரவிட்டது. குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் முன்ஜாமீன் வழங்கிய உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு இன்று ரத்து செய்தது.
வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை 5 வாரங்களுக்கு கைது செய்யக் கூடாது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கும் வழங்கப்பட்ட முன்ஜாமீனை மீண்டும் நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு கேரள ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டது.