காஷ்மீருக்கு தன்னாட்சி கொள்கையை அமல்படுத்தக்கோரி மனு; அபராதம் விதித்து தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு
காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க தன்னாட்சி கொள்கையை அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்த சில நிமிடங்களில் தள்ளுபடி செய்யப்பட்டது.
புதுடெல்லி,
காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் ஆகியோரால் 4 வழிமுறைகள் வடிவமைக்கப்பட்டது.
அதில், காஷ்மீருக்கு தன்னாட்சி வழங்குதல், இருநாடுகளும் இணைந்து காஷ்மீரை கட்டுப்படுத்துதல், காஷ்மீரில் இருந்து ராணுவத்தை திரும்பப்பெறுதல், இரு நாடுகளுக்கும் இடையேயான காஷ்மீர் எல்லையை திறத்தல் உள்ளிட வழிமுறைகள் வடிவமைக்கப்பட்டன. ஆனால், இந்த யோசனைகள் அமலுக்கு வரவில்லை.
இதனிடையே, காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க மன்மோகன் சிங் - பர்வேஷ் முஷராப்பால் வடிவமைக்கப்பட்ட 4 வழிமுறைகளை அமல்படுத்தவேண்டும் என கோரி மும்பை ஐஐடி பட்டதாரி பிரபாகர் வெங்கடேஷ் தேஷ்பாண்டே என்ற நபர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஹிமா கோலி அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கிய சில நிமிடங்களில் சுப்ரீம் கோர்ட்டு வழக்கை தள்ளுபடி செய்தது. நில கொள்கை விவகாரங்களில் கோர்ட்டு தலையிட முடியாது. அதேவேளை மனுதாரர் இந்த வழக்கை தான் பிரபலம் அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு தொடர்ந்துள்ளார்.
ஆகையால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், கோர்ட்டில் நேரத்தை வீணடித்ததற்காக மனுதாரருக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.