ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கத்துக்கு பூஜை செய்ய அனுமதி கோரிய மனு ஜூலை 21-ம் தேதி விசாரணை


ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கத்துக்கு பூஜை செய்ய அனுமதி கோரிய மனு ஜூலை 21-ம் தேதி விசாரணை
x

ஞானவாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கத்தில் வழிபட அனுமதிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுடெல்லி,

ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக, மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் சிவலிங்கத்தில் இந்து பக்தர்களை வழிபட அனுமதிக்கக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மே மாதம், கீழ் கோர்ட்டு உத்தரவுப்படி நடத்திய வீடியோ ஆய்வின் போது, ஞானவாபி மசூதியின் வசூகானா (தொட்டியில்) ஒரு சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்து தரப்பு வாதத்தில் முன்பு கூறியிருந்தனர். ஆனால் இந்த கோரிக்கை முஸ்லிம் தரப்பால் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஜூலை 14-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நடைபெறும் 'சிரவண' மாதத்தில் சிவலிங்க பூஜை செய்ய, அரசியலமைப்பு உரிமையை மேற்கோள் காட்டி மனுவில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

"இந்த விவகாரம் ஏற்கெனவே வாரணாசி மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் இருந்தாலும், வாரணாசியில் உள்ள சிவன் கோயிலை இடித்துவிட்டு ஞானவாபி மசூதி கட்டப்பட்டது என்பதை பல்வேறு பதிவுகள் வெளிப்படுத்துகின்றன. எனவே, ஒரு வழிபாட்டாளராக, மசூதி வளாகத்தில் சிவலிங்கம் இருந்தால், சட்டப்படி விண்ணப்பதாரரின் வழிபாட்டு உரிமைகள் படி, அங்கு போய் வழிபட உரிமை உண்டு" என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஞானவாபி மசூதிக்குள் காணப்படும் சிவலிங்கத்தை வழிபட அனுமதிக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது மனு இதுவாகும்.

மறுபுறம், மசூதி தரப்பு குழு அதன் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டது சிவலிங்கம் அல்ல, இது ஒரு நீரூற்று என்று தெரிவித்து வருகிறது.

மேலும், உண்மைத் தன்மையை கண்டறிய, கார்பன் டேட்டிங், தரையில் ஊடுருவும் ரேடார் தொழில்நுட்பம் அல்லது அகழ்வாராய்ச்சியைப் பயன்படுத்தி சிவலிங்க கட்டமைப்பின் கீழ் கட்டுமானத்தின் தன்மையை கண்டறிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தொடரப்பட்ட இந்த மனு, ஜூலை 21-ம் தேதி விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.


Next Story