கார் மீது முட்டை வீசிய சம்பவம் எதிரொலி: சித்தராமையாவுக்கு பாதுகாப்பு மாநிலம் முழுவதும் விஸ்தரிப்பு
கார் மீது முட்டை வீசிய சம்பவம் எதிரொலியால் சித்தராமையாவுக்கு பாதுகாப்பு மாநிலம் முழுவதும் விஸ்தரிக்கப்பட்டுளளது.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சென்றிருந்த எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசப்பட்டு இருந்தது. அவரது காரை முற்றுகையிட்டு பா.ஜனதாவினர் போராட்டத்திலும் ஈடுபட்டு இருந்தனர். பாதுகாப்பு குறைபாடு காரணமாக தன் மீது முட்டை வீசப்பட்டு இருப்பதாக சித்தராமையா குற்றச்சாட்டு கூறினார். இந்த சம்பவம் காரணமாக காங்கிரஸ் தலைவர்களும், போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா மீது குற்றச்சாட்டு கூறியதுடன், போலீஸ் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும்படி மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன்சூட்டுக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டு இருந்தார். இதையடுத்து சித்தராமையாவுக்கு போலீஸ் பாதுகாப்பு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா பெங்களூருவில், அவர் செல்லும் பகுதிகளுக்கு போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். இனிமேல் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் சித்தராமையா எங்கு சென்றாலும், அவருடன் பாதுகாப்பு போலீசார் வாகனங்களில் செல்ல வேண்டும் என்று மாநில போலீஸ் டி.ஜி.பி. பிரவீன் சூட் உத்தரவிட்டுள்ளார். அதாவது சித்தராமையாவின் காருடன், பாதுகாப்பு வாகனம் செல்லும். அதில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், ஆயுதப்படை போலீஸ்காரர், டிரைவர் மற்றும் போலீஸ்காரர் இருப்பார்கள். இதுதவிர எஸ்கார்ட் வாகனத்தில் ஒரு ஆயுதப்படை போலீஸ்காரர், உதவி சப்-இன்ஸ்பெக்டரும் சித்தராமையாவின் பாதுகாப்புக்கு செல்வார்கள் என்று அவர் தெரிவித்தார்.