வாக்கு வங்கி அரசியல் மட்டுமே காங்கிரஸ் செய்கிறது : அமித்ஷா பாய்ச்சல்
இந்தியா ஒரு தேசம் கிடையாது என சொன்னவர்கள் தற்போது இந்தியாவை ஒன்றுபடுத்துங்கள் என்ற கோஷத்துடன் வெளிநாட்டு டி- ஷர்ட் அணிந்தபடி யாத்திரை செல்வதாக அமித்ஷா விமர்சித்துள்ளார்.
ஜெய்பூர்,
காங்கிரஸ் கட்சி வாக்குவங்கி அரசியலிலும் திருப்தி படுத்தும் அரசியலில் மட்டுமே ஈடுபடுவதாக உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா விமர்சித்துள்ளார். ராஜஸ்தானில் வாக்குச்சாவடி மட்டத்திலான கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய அமித்ஷா கூறியதாவது: ராகுல் காந்தியும் பிற காங்கிரஸ் தலைவர்களும் பாராளுமன்றத்தில் பேசியதை நினைவுகூர நான் விரும்புகிறேன். இந்தியா ஒரு தேசம் அல்ல என்று ராகுல் காந்தி கூறினார்.
எந்த புத்தகத்தில் இதை ராகுல் காந்தி படித்தார் என்று தெரியவில்லை. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்து உருவாக்கிய தேசம் இதுவாகும். இந்தியா ஒரு தேசம் கிடையாது என சொன்னவர்கள் தற்போது இந்தியாவை ஒன்றுபடுத்துங்கள் என்ற கோஷத்துடன் வெளிநாட்டு டி ஷர்ட் அணிந்தபடி யாத்திரை செல்கிறார்கள். ராகுல் காந்தி இந்திய வரலாற்றை முதலில் படிக்க வேண்டும். காங்கிரஸ் நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்றவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்கும் திருப்திபடுத்தும் அரசியலுக்காக மட்டுமே பணியாற்றுகிறது" என்றார். '