ரூபாய் 20 கொடுத்து தேசியக் கொடி வாங்கினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் விநியோகம்- பா.ஜ.க. எம்.பி. கடும் கண்டனம்
ரேஷன் ஊழியரிடம் கேட்கப்பட்ட போது கொடி வாங்க மறுப்பவர்களுக்கு ரேஷன் வழங்கக்கூடாது என உத்தரவு வந்துள்ளதாக தெரிவித்தார்.
சண்டிகர்,
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடும் வகையில் வீடு தோறும் தேசியக்கொடி ஏற்றும் 'ஹர்கர் திரங்கா' திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன்படி வருகிற 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக அஞ்சல் அலுவகங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அரியானா மாநிலத்தில் ரேஷன் கடைகளில் ரூபாய் 20 கொடுத்து தேசியக்கொடி வாங்கினால் மட்டுமே ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து அரியானாவில் உள்ள ஒரு செய்தி இணையதளம் பதிவு செய்த வீடியோவில், ரேஷன் கடைகளில் தேசியக் கொடியை வாங்கும்படி மக்கள் கட்டாயபடுத்தப்படுவதாகும் அல்லது ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாகவும் பொதுமக்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து குறிப்பிட்ட ரேஷன் கடை ஊழியரிடம் கேட்டகப்பட்ட போது "கொடி வாங்க மறுப்பவர்களுக்கு ரேஷன் வழங்கக்கூடாது' என உத்தரவு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ வைரலானதை அடுத்து இதற்கு பலரும் இணையத்தில் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ரேஷன் கார்டுதாரர்கள் தேசியக் கொடியை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் அல்லது அவர்களுக்கு உரிமையுள்ள தானியங்களின் பங்கு மறுக்கப்படுகிறது. தேசிய கொடிக்கான விலைக்காக ஏழைகளின் உணவைப் பறிப்பது வெட்கக்கேடானது" என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, அந்த ரேஷன் கடை ஊழியரின் உரிமம் ரத்து செய்யப்பட்டது.