உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு வந்த ஷாரிக்; நாசவேலையில் ஈடுபட திட்டமா?


உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு வந்த ஷாரிக்; நாசவேலையில் ஈடுபட திட்டமா?
x
தினத்தந்தி 2 Dec 2022 6:45 PM GMT (Updated: 2 Dec 2022 6:47 PM GMT)

உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு பயங்கரவாதி ஷாரிக் வந்து சென்றது உறுதியாகி உள்ளது. இதன்மூலம் அவர் உடுப்பி கிருஷ்ணன் கோவிலில் நாசவேலையில் ஈடுபட திட்டமிட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு:

பயங்கரவாதி ஷாரிக்

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே நாகுரி பகுதியில் கடந்த மாதம்(நவம்பர்) 19-ந் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ.(தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பயங்கரவாதி ஷாரிக் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கர்நாடகத்தில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த ஆயத்தமாகி வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் உடுப்பியில் உள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு ஷாரிக் வந்ததாகவும், அவர் அங்கு வெடிகுண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் தகவல்கள் பரவியது. தற்போது அந்த தகவலை உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்‌ஷய் மச்சீந்திரா உறுதிப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உடுப்பி கிருஷ்ணன் கோவில்

உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு, பயங்கரவாதி ஷாரிக் வந்து சென்றதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஷாரிக்கிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மங்களூரு மாநகர போலீசார் உடுப்பிக்கு வந்து விசாரணை நடத்திவிட்டு சென்றுள்ளனர். கடந்த அக்டோபர் மாதத்தில் ஷாரிக் ஒருமுறை உடுப்பி கிருஷ்ணன் கோவிலுக்கு வந்து சென்றுள்ளார்.

உடுப்பி போலீசார் யாரும் இதுபற்றி விசாரணை நடத்தவில்லை. ஷாரிக் உடுப்பிக்கு வந்து சென்றது பற்றி முழுமையாக கூற முடியாது. அதுபற்றிய விரிவான விளக்கத்தை மங்களூரு போலீசார் தெரிவிப்பார்கள்.

பேச்சுவார்த்தை

உடுப்பி மாவட்டத்தில் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். குறிப்பாக உடுப்பியில் உள்ள மல்பே பகுதியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் மாநிலம் முழுவதும் சென்று பணியாற்றி வருகிறார்கள். இதுபற்றி ஏற்கனவே மீன்பிடி சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும் வெளிமாவட்டம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் மல்பேவுக்கு வந்து அங்குள்ள மீன் தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகிறார்கள்.

மீன்பிடி தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மீன்பிடி வலை, ஐஸ் கட்டி தொழிற்சாலை போன்றவற்றிலும் பணிபுரிந்து வருகிறார்கள். இதுபோல் பணிபுரிந்து வரும் தொழிலாளர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் சேகரித்து வைக்கும்படி மீனவர் சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மீன்பிடி தொழிலாளர்கள்

தற்காலிக பணிகளுக்கு வந்தாலும் அவர்களைப் பற்றிய முழு விவரங்களை சேகரித்து வைக்கும்படி எச்சரிக்கப்பட்டு உள்ளது. முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. மீன்பிடி தொழிலாளர்கள் தலைவரிடமும் பேசப்பட்டு தகவல்கள் பெறப்பட்டு உள்ளது. பாதுகாப்பு மற்றும் அமைதியை கட்டுக்குள் வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தொழிநுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி வருகிறோம். மங்களூரு சம்பவத்தை தொடர்ந்து விழித்துக் கொண்டுள்ளோம். இதுதொடர்பாக நான் மாவட்ட கலெக்டருடனும் பேசி இருக்கிறேன். மாவட்டத்தின் பாதுகாப்பு மற்றும் மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கான பாதுகாப்பு குறித்தும் பேசி ஆலோசனை நடத்தினோம்.

நடவடிக்கை எடுப்போம்

மாவட்டத்தின் பாதுகாப்பு, கோவில்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிப்படுத்த மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுவை அமைக்க உள்ளோம். சுழற்சி முறையில் பாதுகாப்பு முறையை ஆய்வு செய்வோம். பாதுகாப்பை பலப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story