ஷாரோன் கொலை: போலீசார் மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்தனர் கிரீஷ்மா அந்தர் பல்டி


ஷாரோன் கொலை: போலீசார் மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்தனர் கிரீஷ்மா அந்தர் பல்டி
x

போலீசார் என்னை மிரட்டி குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்தனர். அதற்கான ஆதாரங்களை அவர்கள் பொய்யாக உருவாக்கினர்' எனக்கூறியுள்ளார் கிரீஷ்மா.

திருவனந்தபுரம்

கேரளாவில் அமைந்துள்ள பகுதி பாறசாலை. இந்தப் பகுதியில் உள்ள மூரியங்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன் ராஜ் (23). இவர் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 'ரேடியாலஜி' இறுதி ஆண்டு படித்து வந்தார்.

கல்லூரிக்கு சென்று வரும் வழியில், களியக்காவிளை அருகே உள்ள ராமன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (20) என்ற இளம்பெண்ணுக்கும், ஷோரோன் ராஜுக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இருவரும் ஓராண்டுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டுக்குமே அரசல்புரசலாக தெரியும் எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில், கடந்த 14-ம் தேதியன்று தனது வீட்டில் யாரும் இல்லை எனக் கூறி காதலன் ஷாரோன் ராஜை கிரீஷ்மா அழைத்துள்ளார். அங்கு அவர் சென்று வந்து உள்ளார்.

அப்போது திடீரென ஷாரோன் ராஜுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு துடித்துள்ளார். பின்னர் இதுகுறித்து ஷாரோன் ராஜ் தனது நண்பர் ஒருவருக்கு தகவல் அளித்தார்.

இதன்பேரில், அங்கு வந்த அவர், ஷாரோன் ராஜை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மறுநாள் அவரது வாயில் புண்கள் ஏற்பட்டன. தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமாகவே, திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக ஷாரோன் ராஜ் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஷாரோன் ராஜின் காதலியான கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தனது வீட்டிற்கு வந்த ஷாரோன் ராஜுக்கு தான் ஒரு ஜூஸ் கொடுத்ததாகவும், அதன் பிறகே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகவும் கிரீஷ்மா தெரிவித்தார்.

மேலும், அந்த ஜூஸ் பாட்டிலை பார்த்த போது தான் அது காலாவதியாகி விட்டது என்பது தெரியவந்ததாகவும் அவர் கூறினார். அதுமட்டுமின்றி, ஜூஸை குடித்ததால்தான் ஷாரோன் ராஜ் உயிரிழந்ததாகவும், தன்னை கைது செய்யுமாறும் போலீசாரிடம் கிரீஷ்மா கதறி அழுதிருக்கிறார்.

இதனைக் கேட்ட போலீசார், அந்த ஜூஸ் பாட்டில் எங்கே எனக் கேட்டுள்ளனர். அதற்கு அவர், கோபத்தில் அதை தூக்கி பாதாளச் சாக்கடையில் எறிந்துவிட்டதாக கூறினார். இதுதான் போலீசாருக்கு அவர் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, கிரீஷ்மாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். அப்போது அவர் கூறியது போலீசாரையே அதிரச் செய்துவிட்டது.

கிரீஷ்மாவுக்கு வேறு ஒருவருடன் நிச்சயம் ஆன நிலையில் ஷாரோன்ராஜை கடந்த அக்டோபர் மாதம் தனது வீட்டுக்கு வரவழைத்து கஷாயத்தில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சிமருந்தை கலந்து கொடுத்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஷாரோன்ராஜ் கொலை வழக்கில், அவரின் காதலி கிரீஷ்மா, கிரீஷ்மாவுக்கு உடந்தையாக இருந்ததாக அவரின் தாய் சிந்து மற்றும் தாய்மாமா நிர்மல் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

கிரீஷ்மா ஜூஸ் சேலஞ்ச் நடத்தி ஷாரோனுடன் சேர்ந்து வீடியோ எடுத்த குழித்துறை பழைய பாலம் பகுதியிலும், திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் அவர்கள் ஜோடியாக சுற்றி திரிந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின்போது ஷாரோனுக்கு கஷாயத்தில் பூச்சுமருந்து கலந்து கொடுத்து கொலை செய்வதற்கு முன்னதாகவே நெய்யூர் கல்லூரியில் வைத்து ஜூஸில் காய்ச்சலுக்கான டோலோ மாத்திரைகளை அதிக அளவில் கலந்துகொடுத்ததாக கிரீஷ்மா ஒப்புக்கொண்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில் கிரீஷ்மாவின் வாக்குமூலம் நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட் கோர்ட் 2- ல் பதிவு செய்யப்பட்டது. அவரின் வாக்குமூலம் குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

கிரீஷ்மாவின் வாக்குமூலத்தில், ``நான் ஷாரோனை கொலை செய்யவில்லை. போலீசார் வேண்டுமென்றே இந்த வழக்கை என்மீது திணித்துள்ளனர். போலீசார் என்னை மிரட்டி குற்றம் செய்ததாக ஒப்புக்கொள்ள வைத்தனர். அதற்கான ஆதாரங்களை அவர்கள் பொய்யாக உருவாக்கினர்" என கூறியுள்ளார்.

கிரீஷ்மாவின் இந்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே சமயம் கிரீஷ்மாவின் வாக்குமூலம் வழக்கை பாதிக்காது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் குற்றத்தை மறுப்பது வழக்கமான ஒன்றுதான். இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது கிரீஷ்மா எங்களுக்கு அளித்த வாக்குமூலத்தை முழுமையாக வீடியோ எடுத்துள்ளோம்.

70 நாள்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளோம். கிரிஷ்மாவை மறுபடியும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளோம், நெய்யாற்றின்கரை கோர்ட் அனுமதி வழங்காமல் இருந்தால் மேல் கோர்ட்டில் அனுமதி கேட்டு மனு அளிக்க உள்ளோம் என கூறினர்.


Next Story