காங்கிரஸ் தலைவர் தேர்தல்: அசோக் கெலாட்டுடன் சசிதரூர் சந்திப்பு


காங்கிரஸ் தலைவர் தேர்தல்: அசோக் கெலாட்டுடன் சசிதரூர் சந்திப்பு
x

அசோக் கெலாட்டை, சசிதரூர் டெல்லியில் சந்தித்து பேசினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 17-ந் தேதி நடக்கிறது. இதில் ராகுல் காந்தியை போட்டியிட வைப்பதற்கு கட்சியின் மூத்த தலைவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதேநேரம் காந்தி குடும்பத்தை சாராத சிலரும் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகி இருந்தன. இதில் ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோரின் பெயர்கள் வலுவாக அடிபடுகின்றன.

எனினும் இந்த தகவலை கடந்த வாரம் புறந்தள்ளிய அசோக் கெலாட், ராகுல் காந்தியை கட்சித்தலைமை ஏற்பதற்கு கடைசி நிமிடம் வரை வலியுறுத்துவோம் என தெரிவித்தார்.

ஆனால் சசிதரூரோ, தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு இது குறித்து முடிவு செய்வேன் என அறிவித்து இருந்தார்.இந்த நிலையில் அசோக் கெலாட்டை, சசிதரூர் டெல்லியில் சந்தித்து பேசினார். சுமார் ½ மணி நேரம் நடந்த இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம், தலைவர் தேர்தல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம் என கருதப்படும் அசோக் கெலாட்டும், சசிதரூரும் சந்தித்து பேசியிருக்கும் விவகாரம் காங்கிரசார் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story