நட்புறவு மூலம் எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியும்: இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா!
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
புதுடெல்லி,
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
ராஷ்டிரபதி பவனுக்கு வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சம்பிரதாயப்படி அரசு வரவேற்பு அளிக்கப்பட்டது.அதன்பின், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, டெல்லி ராஜ்காட்டில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வர்த்தகம், இணைப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் குறித்து இரு பிரதமர்களும் இன்று விவாதிக்க உள்ளனர். இந்தியா மற்றும் வங்கதேசம் குஷியாரா நதியில் நீர் பங்கீடு தொடர்பான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வாய்ப்புள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே ரெயில்வே, அறிவியல், விண்வெளி மற்றும் ஊடக ஒத்துழைப்பு ஆகியவற்றில் பயிற்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பேசுகையில், "இந்தியா வங்கதேசத்தின் நட்பு நாடு. நான் இந்தியாவிற்கு வரும்போதெல்லாம், எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, குறிப்பாக வங்கதேச விடுதலைப் போரின் போது இந்தியா செய்த பங்களிப்பை நாங்கள் எப்போதும் நினைவுகூருகிறோம்.
நாம் ஒரு நட்பு உறவு கொண்டுள்ளோம், இந்தியா வங்கதேசம் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கிறோம். பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையில், நட்பின் மூலம் எந்த பிரச்சனையையும் தீர்க்க முடியும். எனவே, நாங்கள் எப்போதும் அதை செய்கிறோம்" என்றார்.