போலீஸ்காரரை தாக்கிவிட்டு ஓடிய வாலிபர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு


போலீஸ்காரரை தாக்கிவிட்டு ஓடிய வாலிபர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
x
தினத்தந்தி 19 Dec 2022 6:45 PM GMT (Updated: 19 Dec 2022 6:46 PM GMT)

கொலை மிரட்டல் வழக்கில் பிடிக்க சென்றபோது போலீஸ்காரரை தாக்கிவிட்டு ஓடிய வாலிபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் சிவமொக்காவில் நடந்துள்ளது.

சிவமொக்கா:

கொலை மிரட்டல் வழக்கில் பிடிக்க சென்றபோது போலீஸ்காரரை தாக்கிவிட்டு ஓடிய வாலிபரை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் சிவமொக்காவில் நடந்துள்ளது.

பெண்ணுக்கு மிரட்டல்

சிவமொக்கா (மாவட்டம்) தாலுகா கும்சி அருகே வீரண்ண பெனவள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் பிரவீன். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வனஜாக்சம்மா என்ற பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக வனஜாக்சம்மா கொடுத்த சிவமொக்கா புறநகர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து பிரவீனை கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஜாமீனில் வெளி வந்த பிரவீன் மீண்டும் வனஜாக்சம்மாவை சந்தித்து தன் மீதான புகாரை வாபஸ் பெறும்படி கூறி கொலை மிரட்டல் விடுத்தார்.

எச்சரிக்கை

இதுபற்றியும் வனஜாக்சம்மா சிவமொக்கா புறநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் நேற்று காலையில் பெனவள்ளி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் பதுங்கி இருந்த பிரவீனை பிடிக்க போலீசார் சென்றனர். அப்போது அவர், போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றார். இதையடுத்து போலீசார் அவரிடம் சரண் அடைந்துவிடும்படி எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால் அவர் போலீசாரை தாக்கிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதையடுத்து சிவமொக்கா புறநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், தன்னிடம் இருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டு பிரவீனுக்கு மீண்டும் எச்சரிக்கை விடுத்தார்.

துப்பாக்கியால் சுட்டார்

ஆனால் போலீசாரிடம் சரண் அடையாமல் பிரவீன் தொடர்ந்து ஓடினார். அதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், பிரவீனின் காலை நோக்கி ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டார். இதில் பிரவீனின் காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் அதே இடத்தில் சுருண்டு விழுந்தார்.

அதையடுத்து போலீசார் பிரவீனை கைது செய்தனர். பின்னர் அவரையும், பிரவீன் தாக்கியதில் காயம் அடைந்த சிவராஜ் என்ற போலீஸ்காரரையும் சிகிச்சைக்காக சிவமொக்காவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் அனுமதித்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story