ஷ்ரத்தா கொலை வழக்கு: கைதான அப்தாபுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு


ஷ்ரத்தா கொலை வழக்கு: கைதான அப்தாபுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
x

ஷ்ரத்தா கொலை வழக்கில் கைதான அப்தாபுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் வசாயை சேர்ந்த மும்பை கால்சென்டர் ஊழியர் ஷரத்தா கடந்த ஆண்டு மே மாதம் அவரது காதலன் அப்தாப் அமீனால் டெல்லியில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். பின்னர் உடலை 35 துண்டுகளாக வெட்டி காட்டில் வீசியதாக கூறப்படுகிறது. கொடூரமாக நடைபெற்ற இந்தக் கொலை சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஷரத்தாவை காணவில்லை என அவரது தந்தை புகார் அளித்தது தொடர்பாக வசாய் மாணிக்பூர் போலீசார், டெல்லி மெக்ராலி போலீசில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கடத்தல் வழக்குப்பதிவு செய்த டெல்லி போலீசார், முக்கிய குற்றவாளியாக சந்தேகப்படும் அப்தாப் அமீனை அவரது வீட்டில் பிடித்தனர்.

தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட அப்தாப்பிடம் உண்மை கண்டறியும் 'பாலிகிராப்' சோதனை மற்றும் நார்கோ சோதனை நடத்தப்பட்டது. இதில் ஷரத்தாவை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில், கொலையாளி அப்தாப்பின் நீதிமன்ற காவல் இன்று முடிவடையும் நிலையில், மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் சுக்லா முன் பூனாவாலா ஆஜர்படுத்தப்பட்டார். அப்தாபின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாள்கள் நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஜனவரி 24-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு காலநிலைக்கு ஏற்ற ஆடைகளை வழங்குமாறு சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story