காஷ்மீரில் தடை செய்யப்பட்ட அமைப்பின் ரூ.122 கோடி சொத்துகள் ஜப்தி


காஷ்மீரில் தடை செய்யப்பட்ட அமைப்பின் ரூ.122 கோடி சொத்துகள் ஜப்தி
x

காஷ்மீரில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புக்கு கடந்த 2019-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், புல்வாமா, குல்காம், பட்காம் மற்றும் ஸ்ரீநகர் மாவட்டங்களில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் பல சொத்துகள் இருப்பதை ஜம்மு காஷ்மீர் விசாரணை அமைப்பு கண்டுபிடித்தது.

அந்த அமைப்பின் பரிந்துரையின் பேரில் அவற்றை ஜப்தி செய்வதற்கான அறிவிக்கையை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டன.

அதன்படி, 12 இடங்களில் உள்ள, ரூ.122.89 கோடி மதிப்பிலான, வீடுகள், கடைகள் உள்ளிட்ட சொத்துகள் நேற்று ஜப்தி செய்யப்பட்டன. அந்த சொத்துகளில் நுழையவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஜப்தி செய்யப்பட்ட சொத்துகளில், மரணம் அடைந்த பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானிக்கு சொந்தமான ஒரு வீடும் அடங்கும். கடந்த 2000-ம் ஆண்டு வரை இங்கு கிலானி வசித்து வந்துள்ளார்.

அந்த வீட்டில் சோதனையும் மேற்கொள்ளப்பட்டு, ஒரு செல்போன் கைப்பற்றப்பட்டது.

காஷ்மீரில் ஜமாத்-இ-இஸ்லாமிக்கு சொந்தமான 188 சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை ஜப்தி செய்வதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது அல்லது அதற்கான நடவடிக்கை தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஜப்தி நடவடிக்கை, காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கான நிதியுதவியை தடுக்கவும், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும் பெருமளவு உதவும் என அதிகாரிகள் கூறினர்.


Next Story