கொப்பலில் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த சித்தராமையா


கொப்பலில் 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த சித்தராமையா
x

சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை பெற்று வரும் நிலையில் கொப்பல் மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கு சித்தராமையா வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

பெங்களூரு: சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை பெற்று வரும் நிலையில் கொப்பல் மாவட்டத்தில் 5 தொகுதிகளுக்கு சித்தராமையா வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

வேட்பாளர்களை அறிவித்தார்

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று கொப்பல் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அங்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகவேந்திர இட்னால் எம்.எல்.ஏ.வின் குடும்ப திருமண நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதில் பேசிய சித்தராமையா, கொப்பல் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார்.

அவர் பேசும்போது, "கனககிரி தொகுதியில் சிவராஜ் தங்கடகி, குஷ்டகி தொகுதியில் அமரேகவுடா பையாப்புரா, எலபுர்காவில் பசவராஜ் ராயரெட்டி, கொப்பலில் ராகவேந்திர இட்னால், கங்காவதியில் இக்பால் அன்சாரி ஆகியோர் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவார்கள். அவர்களுக்கு நீங்கள் ஆதரவு அளித்து வெற்றி பெற வைக்க வேண்டும்" என்றார்.

இடம் பெறவில்லை

ஒருபுறம், கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. மற்றொருபுறம் சித்தராமையா, கொப்பல் மாவட்டத்தில் வேட்பாளர்களை அறிவித்து ஆதரவு வழங்குமாறு கேட்டுள்ளது காங்கிரசில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த திருமண நிகழ்ச்சியில் சித்தராமையாவை வரவேற்று பெரிய அளவில் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் படம் எங்கும் இடம் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே மோதல் இருப்பது வெட்டவெளிச்சம் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story