அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்த சித்தராமையா


அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசித்த சித்தராமையா
x

அரசியல் பரபரப்புக்கு மத்தியில் பெங்களூரு-ஐதராபாத் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டியை சித்தராமையா டி.வி.யில் பார்த்து ரசித்தார்.

பெங்களூரு:-

கிரிக்கெட் ஆர்வலர்

கர்நாடகத்தின் முதல்-மந்திரியாக சித்தராமையா 2-வது முறையாக இன்று பதவி ஏற்கிறார். சித்தராமையா நாட்டுப்புற கலைகள், கிரிக்கெட், திரைப்படங்களை பார்த்து ரசிக்க கூடியவர். எவ்வளவு பெரிய அரசியல் பரபரப்புக்கு மத்தியிலும் கிரிக்கெட், திரைப்படங்கள், நாட்டுப்புற கலைகளை ரசிப்பதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தல் சமயத்தில் கூட சித்தராமையா பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிய ஐ.பி.எல். 20 கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று கண்டுகளித்தார்.

அரசியல் பரபரப்பு

இதற்கிடையே கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த இழுபறிக்கு பிறகு நேற்று முன்தினம் சித்தராமையாவை காங்கிரஸ் ேமலிடம் முதல்-மந்திரியாக தேர்வு செய்து அறிவித்தது. அதன்பிறகு டெல்லியில் இருந்து விமானத்தில் பெங்களூருவுக்கு இரவு 7 மணி அளவில் வந்த அவர் காரில் குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதில் அவர் சட்டசபை காங்கிரஸ் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டம் முடிந்ததும் தனது கட்சி சகாக்களுடன் ராஜ்பவன் சென்று கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினார். இவ்வாறு நேற்று முன்தினம் பல்வேறு அரசியல் ஆட்டங்கள் நடந்ததற்கு மத்தியிலும் சித்தராமையா இரவு 11.15 மணி அளவில் பெங்களூரு குமரகுருபா ரோட்டில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றார்.

கிரிக்கெட் போட்டியை பார்த்தார்

அங்கு சென்றதும் அவர் டி.வி.யில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் போட்டியை கண்டு ரசித்தார். அதாவது இந்த போட்டியின் இறுதி ஓவர் அவர் டி.வி.யில் பார்த்து ரசித்துள்ளார். இந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றதும் அவர் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதனை காங்கிரஸ் பிரமுகர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். தற்போது அரசியல் பரபரப்புக்கு மத்தியில் சித்தராமையா கிரிக்கெட் போட்டியை கண்டு ரசித்தது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story