சாவிலும் கீழ்மட்ட அரசியல் செய்வது சித்தராமையாவுக்கு புதிது அல்ல
சாவிலும் கீழ்மட்ட அரசியல் செய்வது சித்தராமையாவுக்கு புதிது அல்ல என்று மந்திரி சுதாகர் குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூரு:-
துமகூருவில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சிகிச்சை அளிக்க நிராகரித்ததால் கர்ப்பிணிக்கு வீட்டில் நடந்த பிரசவத்தில், அந்த பெண்ணும், 2 சிசுக்களும் உயிர் இழந்தனர். இதற்கு பொறுப்பு ஏற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்து இருந்தார். இதற்கு சுகாதாரத்துறை மந்திரி சுதாகர், சித்தராமையாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
சாவு நடந்த வீட்டிலும் அரசியல் செய்வது எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கு புதிது அல்ல. சாவிலும் கீழ்மட்ட அரசியல் செய்வது பற்றி மாநில மக்களும் அறிந்து கொள்வது புதிது ஏதும் இல்லை. 2015-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்தவர் சித்தராமையா. அந்த ஆண்டு மாநிலத்தில் 5,109 சிசுக்களும், 519 கர்ப்பிணிகளும் பலியானார்கள். அப்போது நீங்கள் (சித்தராமையா) பதவியை ராஜினாமா செய்தீர்களா?, அல்லது சுகாதாரத்துறை மந்திரியிடம் இருந்து ராஜினாமா பெற்றீர்களா?.
நீங்கள் முதல்-மந்திரியாக இருந்த போது, உங்களது சொந்த மாவட்டம் மைசூருவில் ஒரே மாதத்தில் 6 கர்ப்பிணிகள் பலியாகி இருந்தார்கள். கோலார் மாவட்டத்தில் 90 சிசுக்கள் பலியானது. இதற்கு பொறுப்பு ஏற்று முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தீர்களா?. அப்படி இருக்கும் பட்சத்தில் துமகூருவில் நடந்த சம்பவத்திற்காக எனது பதவியை ராஜினாமா செய்ய சொல்வது அரசியல் காரணங்களுக்காக மட்டுமே.
இவ்வாறு சுதாகர் கூறியுள்ளார்.